Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 07, 2013

கடலூர் மாவட்டத்தில் அபாயகரமான நிலையில் நிலத்தடி நீர்!

கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உள்ளதால் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 683 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மழைநீர் சேகரிப்பு குறித்து ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு கடலூர் காவலர் நல திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அமல்ராஜ் தலைமை தாங்கிப் பேசுகையில், "உலகின் மொத்த நீர் அளவில் 3 சதவீதம் மட்டுமே தூய்மையான நீராக உள்ளது. மீதமுள்ள நீர் அனைத்தும் கடல் நீராகும். பெருகி வரும் மக்கள்தொகை, நகரமயமாதல், தொழிற்சாலைகளின் வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் சமீபகாலமாக குறைந்து விட்டது.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை சராசரி மழை அளவு ஆண்டுக்கு 1316 மி.மீ. ஆகும். எனவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி நமது மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உள்ளது. நாம் அனைவரும் நமது வீடுகளில், சுற்றுப்புற பகுதிகளில் உடனடியாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மழைநீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதுமட்டுமின்றி நிலத்தின் ஈரப்பதம் அதிகரிக்கும். கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை வெகுவாக குறையும். முதலில் அரசு கட்டமைப்புகளில் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது. ஆகவே ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் இத்திட்டத்தை மிகவும் முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும்' என்றார்.

தொடர்ந்து குடிநீரைப் பரிசோதனை செய்யும் கருவி அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஊராட்சிகளின்
உதவி இயக்குநர் கதிரேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயற்பொறியாளர் அந்தோணிசாமி உள்பட அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
-Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...