Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 09, 2013

பிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...

பிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள சில படிப்புகள் விவரம்...

பி.ஏ., டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட் சுற்றுலா துறை வளர்ந்து வரும் முக்கியத்துறை. இப்படிப்பில் சேர விரும்புபவர்கள் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். பிஸினஸ் டூரிஸம் புராடெக்ட்ஸ், டூரிஸம் மார்க்கெட்டிங், இன்டர்நேஷனல் டூரிஸம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஃப்ரண்ட் ஆபீஸ் மேனேஜ்மெண்ட், கம்ப்யூட்டர் ரிசர்வேஷன் சிஸ்டம், டிக்கெட் புக்கிங், டூரிஸம் அண்ட் ஹியூமன் ரைட்ஸ், டூர் கைட்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ் என டூரிஸம் குறித்த பல்வேறு பாடங்களையும் இந்த மூன்றாண்டுகளில் கற்றுக் கொடுத்து விடுவோம். அதுமட்டுமின்றி, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய வெளிநாட்டு மொழிகளையும் கற்றுக்கொடுத்து விடுவோம். இப்படிப்பை முடித்தவர்கள் சர்வதேச, இந்திய அளவில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றலாம். சொந்தமாக டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தலாம், விமானம், ரயில் என அனைத்து விதமான பயணங்களுக்கும் டிக்கெட் புக்கிங் செய்து தரும் அலுவலகத்தில் பணிபுரியலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சுற்றுலா வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணியாற்ற முடியும். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ப்ரண்ட் ஆபீஸ் மேனேஜராகவும் பணியாற்றலாம். கைடாக இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்" என்கிறார், எத்திராஜ் மகளிர் கல்லூரி, டூரிஸம் துறைத் தலைவர் சுப்புலட்சுமி.

சில கல்லூரிகள், புவியியல் பாடத்துடன் சேர்த்து டூரிஸம் மற்றும் டிராவல் மேனேஜ்மெண்ட் படிப்பை வழங்குகின்றன. பி.ஏ., எக்கனாமிக்ஸ் பொருளாதாரத்துறையில் ஆர்வமிக்க மாணவர்கள் பொருளாதாரத்தில் இளநிலைப் பட்டப் படிப்பைத் தேர்வு செய்யலாம். இப்பட்டப்படிப்பில் சேருவதற்கு பிளஸ் டூ வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எக்கனாமிக் தியரிஸ், எக்னாமெட்ரிக்ஸ், மேத்ஸ் அண்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ், இந்தியப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரம் போன்றவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். இதைத்தவிர, பொருளாதாரம் தொடர்புடைய பல்வேறு துணைப்பிரிவு பாடங்களும் கற்றுத் தரப்படும். இப்படிப்பை படித்து முடித்தவர்கள், ஃபைனான்ஸியல் அனலிஸ்ட் ஆகவும், எக்கனாமிக்கல் அனலிஸ்ட் ஆகவும் பணியாற்றலாம்.வங்கித்துறைப் பணிகளில் சேரலாம். ஃபைனான்ஸியல் ஜர்னல்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியன் எக்கனாமிக் சர்வீஸ் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத இப்பாடங்கள் உறுதுணையாக இருக்கும்"

பி.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள், விருப்பப் பாடமாக எடுக்கும் பாடங்களில் ஒன்று, பொலிட்டிக்கல் சயின்ஸ். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவர்களுக்கான படிப்பு இது என்றே சொல்ல வேண்டும். பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பாடப் பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும் இப்பட்டப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள் ஆவர். பொது நிர்வாகம், இந்திய அரசியல் அமைப்பு, அரசியல் தத்துவம் மற்றும் சிந்தனைகள், மனித உரிமைகள், பொதுநிர்வாகம் குறித்த தியரிகள், அரசியல், மானுடவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. இப்படிப்பை முடித்த மாணவர்கள், திறம்பட படித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள் மற்றும் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, உயர்பதவிகளை வகிக்கலாம்.

ஊடகங்களிலும் பணியாற்றலாம். பொலிடிக்கல் சயின்ஸ் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றால் பப்ளிக் பாலிஸி அமைப்பு, திட்டக்குழு போன்றவற்றிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். சென்டர் பார் செக்யூரிட்டி ஸ்டடீஸ், இன்ஸ்டிட்யூட் பார் பீஸ் அண்ட் கான்பிளிக்ட் ஸ்டடீஸ் உள்ளிட்ட ‘திங்க் டேங்க்’ (சிந்தனைக் குழு) அமைப்புகள் மூலம் இப்படிப்பு படித்த மாணவர்களின் ஆலோசனைகள், கருத்துகள், ஆய்வு முடிவுகள் போன்றவை அரசின் கொள்கை அமைப்பில் முக்கிய கருத்துருக்களாக எடுத்துக் கொள்ளப்படும்"

பி.எஸ்சி., ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கணிதத்தைப் போலவே புள்ளியியல் படிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. நல்ல வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய படிப்பு இது. இந்தப் படிப்பு குறித்த விழிப்புணர்வு, மாணவர்களிடம் பரவலாக இல்லை. பிளஸ் டூ வகுப்பில் மேத்ஸ், பிஸினஸ் மேத்ஸ், மேத்ஸ் வித் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பிரிவில் படித்த மாணவர்களுக்குத்தான் இப்படிப்பில் முதல் முன்னுரிமை. கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது அவசியம். ஸ்டாட்டிஸ்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எக்கனாமிக்ஸ், மெடிக்கல் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் ஆகிய பாடங்கள் இப்படிப்பில் கற்றுத்தரப்படும். இன்றைய காலகட்டத்தில் பெருமளவிலான புள்ளிவிவரங்களை கம்ப்யூட்டரில் பாரமரிப்பதால் இப்படிப்பில் கணினிக்கும் முக்கியத்துவம் தருகிறோம். பிஸினஸ் ரிசர்ச், மெடிக்கல் ரிசர்ச், ஐ.டி. நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் டேட்டா அனலிஸ்டாக பணியாற்றலாம். ரிசர்ச் அண்ட் டெவலெப்மெண்ட் பிரிவில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இத்துறையில் வேலைவாய்ப்பு அதிகம் இருந்தும், போதிய மாணவர்கள் இத்துறையில் படிப்பதில்லை என்பதுதான் மிகவும் வருத்தமான விஷயம்"

பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிக்கேஷன் அச்சு ஊடகம், தொலைக்காட்சி, திரைப்படம், புகைப்படம், அனிமேஷன், விளம்பரம் போன்ற பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் படிப்பு இது.ஊடக வரலாறு, திரைப்படம், டி.வி., ரேடியோ, அட்வர்டைசிங், கார்டூன்ஸ், அனிமேஷன் அண்ட் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பிரிண்ட் மீடியா, ஆன்லைன் மீடியா, போட்டோகிராபி உள்ளிட்ட பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படும். இதில் ஏதேனும் ஒருதுறையில் ஆர்வம் அதிகமுள்ள மாணவர்கள் அந்தத் துறையில் சாதிப்பதற்கு இப்படிப்பு ஒரு அடித்தளமாக அமையும். இப்படிப்பை முடித்தவர்களுக்கு டி.வி., ரேடியோ, ஆன்லைன், பிரிண்ட் என அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன. சொந்தமாய் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள், தனியாக போட்டோ ஸ்டுடியோ நடத்தலாம். 2 டி, 3 டி என அனிமேஷன் துறையில் அசத்தலாம். விளம்பரத்துறையிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. பிரபல திரைப்பட இயக்குநர் விஷ்ணுவர்தன், நடிகர்கள் விஜய், ஜெயம் ரவி, விஷால் போன்றோர் விஸ்காம் எனப்படும் விஷுவல் கம்யூனிக்கேஷன் படித்த மாணவர்களே"

பி.எஸ்சி., பிஸிக்கல் எஜுக்கேஷன் விளையாட்டில் ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு பிசிக்கல் எஜுக்கேஷன். 50 சதவீதம் படிப்பு, 50 சதவீதம் விளையாட்டு என உங்களை இத்துறையில் மேம்படுத்தும் படிப்பு இது. ஹிஸ்டரி ஆஃப் கேம்ஸ், ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் ஆஃப் ஆல் தி கேம்ஸ், ரெக்ரியேஷன், கிராம்பிங் (தசைப்பிடிப்பு), அம்பயர்ஸ், பயோ மெக்கானிக்ஸ் அண்ட் கிம்சியாலஜி (உடல் அசைவுகள்), அனாட்டமி அண்ட் பிஸியாலஜி, ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி, ஸ்போர்ட்ஸ் சோஷியாலஜி, எக்ஸர்சைஸ் பிஸியாலஜி, டெஸ்ட் அண்ட் மெஷர்மெண்ட், டோர்னமெண்ட் ஆர்கனைசிங் மெத்தட்ஸ் அண்ட் பிஸிக்கல் எஜுக்கேஷன் ஆகிய பாடங்கள் இப்படிப்பில் கற்றுத்தரப்படும். ஸ்போர்ட்சில் திறனை வளர்த்துக் கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மத்திய அரசுப் பணிகள், மாநில அரசுப் பணிகள், குறிப்பாக காவல்துறைப் பணியிடங்கள் ஆகியற்றில் ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’ மூலம் பணிவாய்ப்பு கிடைக்கும். பி.எட். படிப்பிற்கு இணையாக, பி.பிஎட். படிப்பில் எவ்வித நுழைவுத் தேர்வுமின்றி படிப்பதற்கு இடம் கிடைக்கும். இதைப் படித்து முடித்தால், பள்ளி, கல்லூரிகளில் பிஸிக்கல் டைரக்டராக பணியாற்றலாம்"

பி.எஸ்சி., நியூட்ரிஷன் அண்ட் டயட்டிடிக்ஸ் உணவே மருந்து என்பது நம் முன்னோர் வாக்கு. அத்தகைய உணவினைப் பற்றியும், சத்தான உணவுகளை எந்தெந்த அளவில் உட்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் கற்றுத்தரும் படிப்பு நியூட்ரிஷன் அண்ட் டயட்டிடிக்ஸ். பிளஸ் டூ வகுப்பில் வேதியியல் பாடத்தைப் படித்தவர்கள், இப்படிப்பில் சேரலாம். பிஸியாலஜி, மைக்ரோ பயாலஜி, மைக்ரோ நியூட்ரிஷன், மேக்ரோ நியூட்ரிஷன், நியூட்ரிஷனல் பயோ கெமிஸ்ட்ரி, டயட்டிடிக்ஸ், ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன், புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், குவான்டிடேட்டிவ் புட் புரடக்ஷன், கம்யூனிட்டி நியூட்ரிஷன் ஆகிய பாடங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படும். இப்படிப்பை முடித்தவர்கள் பப்ளிக் ஹெல்த் சென்டர்களில் ஹெல்த் ஒர்க்கர்ஸ் ஆக பணியாற்றலாம். பிட்னெஸ் சென்டர்களில் நியூட்ரிஷியன் ஆலோசகர்களாகப் பணியாற்றலாம். மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்களில் டயட்டீஷியனாக பணியாற்றலாம். இதயநோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் போன்றோர்களுக்கான டயட்டீஷியன் ஆலோசகர்களாக பணியாற்றலாம். சொந்தமாகவும்
தனியே ஆலோசனை மையங்களை நடத்தலாம்"

பி.வி.ஏ., - பேச்சுலர்ஸ் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ் நான்கு ஆண்டு கால படிப்பு இது. ஓவியத்துறையில் ஆர்வமுள்ளவர்கள், கலைப்பொருள் தயாரிப்பதில் நாட்டமுள்ளவர்களுக்கான படிப்பு இது. வண்ணம் தீட்டுதல், படம் வரைதல், கோட்டோவியங்கள் என சகலமும் கற்றுத்தரும் படிப்பு இது. பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பிரிவில் படித்திருந்தாலும் சரி, ஓவியத்தில் ஈடுபாடு, ஆர்வமிருந்தால் போதும். இது 50 சதவீதம் பயிற்சி, 50 சதவீதம் படிப்பு என இருக்கும். ஹிஸ்டரி ஆஃப் ஆர்ட்ஸ், வெஸ்டர்ன் ஆர்ட்ஸ், இந்தியன் ஆர்க்கிடெக்ச்சர், பேஸிக் டிசைன், கலர் டிராயிங், பேஸிக் பெயிண்டிங், ஐரோப்பியக் கலை, ஐரோப்பாவில் 19-ஆம் நூற்றாண்டில் கலை, மாடர்ன் ஆர்ட் இன் வெஸ்ட், இந்தியன் போக் ஆர்ட் ஆகியவை முக்கியப் பாடங்களாக கற்றுத் தரப்படும். இத்துடன் பெயிண்டிங் குறித்தோ அல்லது டிசைன் குறித்தோ தனிவிருப்பப் பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். பெயிண்டிங்கை மாணவர்கள் தேர்வு செய்தால், அதில் ஸ்டில் லைஃப் பெயிண்டிங், லேண்ட்ஸ்கேப் பெயிண்டிங், ஃபிகர் கம்போஸிஷன், கிரியேட்டிவ் எக்ஸ்புளரேஷன்ஸ், கிரியேட்டிவ் பெயிண்டிங், பாரம்பரிய ஓவியம், போர்ட்ரெட் பெயிண்டிங் ஆகிய பாடங்கள் கற்றுத்தரப்படும்.

டிசைன் பிரிவை மாணவர்கள் தேர்வு செய்தால், அதில் டிராயிங் டிசைன், இல்லஸ்ட்ரேஷன் டெக்னிக்ஸ், டிசைன் ஃப்ரம் ஆர்ட் சோர்ஸஸ், ப்ராசஸ் ஆஃப் கிராபிக் டிசைன் டெவலப்மெண்ட், டைப்போகிராபி, டெக்ஸ்டைல் ஸ்டடீஸ், கிராபிக் டிசைன் ஆகிய பாடங்கள் கற்றுத் தரப்படும். கலை அடிப்படைகள், போர்ட்ரெட் ஸ்டடீஸ், அகாடமிக் ரைட்டிங், டிஜிட்டல் போட்டோகிராபி போன்றவை துணைப்பாடங்களாகக் கற்றுத் தரப்படும். இப்படிப்பை முடித்தவர்கள், ஓவியர்களாகப் பணியாற்றலாம். டிசைனைராகப் பணியாற்றலாம். இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு டெக்ஸ்டைல் துறை, விளம்பரத்துறை, ஓவியத்துறை, வெப்டிசைனிங் துறை எனப் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்"

பி.எஸ்சி., ஆக்ச்சுவேரியல் சயின்ஸ் நிதித்துறையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கணித்து, அதற்கேற்றாற்போல் நிதியை அல்லது நிறுவனத்தைக் கையாளும் திறன் வேண்டுமா உங்களுக்கு? காப்பீட்டுத்துறை பணிகளில் சேர வேண்டுமா? வங்கித்துறை பணிகளில் சேருவதில் ஆர்வமா? அப்படியானால் நீங்கள், ஆக்ச்சுவேரியல் சயின்ஸ் படிப்பைத் தேர்வு செய்யலாம். பங்குச் சந்தை, வங்கி நிர்வாகம், காப்பீட்டுத்துறை நிர்வாகம், காப்பீட்டு அமைப்பு, புதிய காப்பீட்டு பாலிசிகளை உருவாக்குவது என நிதி சார்ந்த பல்வேறுத் துறைகளிலும் உங்களை தயார்படுத்தும் படிப்புதான் இந்த ஆக்ச்சுவேரியல் சயின்ஸ். பிளஸ் டூ வகுப்பில் மேத்ஸ், பிஸினஸ் மேத்ஸ், ஸ்டாட்டிஸ்டிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகளின் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்துப் படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். பேஸிக் மேத்ஸ், ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எக்கனாமிக்ஸ், ஃபைனான்ஸ், ஆபரேஷனல் ரிசர்ச், கம்ப்யூட்டர், இன்ஸ்சூரன்ஸ் ஆகியவை முக்கியப் பாடங்களாக இப்படிப்பில் கற்றுத் தரப்படும். பென்ஷன் துறை, காப்பீட்டுத் துறை, வங்கித் துறை, பங்குச்சந்தைத் துறை என நிதி எங்கெல்லாம் கையாளப்படுகிறதோ, அங்கெல்லாம் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதே பாடப்பிரிவில் முதுநிலைப் படிப்பையும் படிக்க வாய்ப்புகள் உள்ளன" 

பி.ஏ., ஜர்னலிஸம் பத்திரிகை, டி.வி., ரேடியோ, இணையதளம் என ஊடகத்துறையில் பணிபுரிய விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான படிப்பு இது. ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். பிரிண்ட் ஜர்னலிஸம், டி.வி., ஜர்னலிஸம், இன்டர்நெட் ஜர்னலிஸம், போட்டோகிராபி, பப்ளிக் ரிலேஷன், அட்வர்டைஸ்மெண்ட் என இதழியல் தொடர்பான பாடங்கள் இந்த மூன்றாண்டு படிப்பில் கற்பிக்கப்படும். படிப்பை முடித்தவர்கள், தாங்கள் விரும்பிய ஊடகத்துறைகளில் சேரலாம். மக்கள் தொடர்பு அதிகாரியாகலாம். புகைப்படக்காரர் ஆகலாம். இதழியலில் முதுநிலைப் படிப்பையும் படித்து விட்டு ஊடகத்துறையில் பணிபுரியலாம்"

source:puthiyathalaimuraikkalvi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...