Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 25, 2013

யார் அந்த யாசீன் மாலிக்?

யாசீன் மாலிக் – தமிழகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் மக்களுக்கு புதிய நபர். அடக்கி ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு உரிமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும், அதற்க்காக போராடும் தலைவர்களுக்கும் நன்கு பரிட்சயப்பட்ட மனிதர். இந்தியாவும், பாகிஸ்தானும் அரசியல் விளையாட்டு விளையாடுவதற்கு பழிகடாக்கலாக்கப்படும் காஷ்மீரிகளின் விடுதலைக்கான அறிவிப்பு தான் யாசீன் மாலிக் என்னும் போராளி, அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி JKLF (Jammu Kashmir Liberation Front).

 காஷ்மீரை அபகரித்து கொள்ள இந்தியாவும், அதை தன் வசமாக்கி கொள்ள பாகிஸ்தானும் செய்யும் சூழ்ச்சிகளிலும், சதிவலைகளிலும் சிக்கி உயிர்களை இழந்து, உறவுகளை இழந்து தவிக்கும் அப்பாவி காஷ்மீரிகளின் விடுதலைக்கான அழைப்பாக அமானுல்லா கான் என்பவரால் மே 29, 1977-ம் ஆண்டு லண்டனில் வைத்து JKLF தொடங்கப்பட்டது. பல போராட்ட, இழப்பு வரலாறுகளுக்கு பிறகு 2005-ல் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாசீன் மாலிக்கால் இன்றளவும் வீரியம் குறையாமல் வழிநடத்தப்படுகின்றது. மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்ட அவர்களது போராட்டத்தின் சாராம்சம் “ஒட்டு மொத்த விடுதலை” – இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடம் இருக்கும் காஷ்மீரை இணைத்து ஒன்றினைந்த காஷ்மீரை உருவாக்கி, ஒரு சுதந்திர பூமியை நிறுவது. இதற்கான முயற்சிகளால் இறங்கிய JKLF, இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் பலம் பொருந்திய செல்வாக்குடன் திகழ்கிறது.

 2007-ல் யாசீன் மாலிக் தலைமையில் “சுதந்திரத்தை நோக்கிய பயணம்” (JOURNEY TO FREEDOM) என்ற அமைதி பிரச்சாரத்தை தொடங்கி 1 வருடம் காஷ்மீரில் சுற்று பயணம் செய்தார்கள். 3500-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் தங்களது கொள்கைகளை வேறூன்ற செய்ததோடு அம்மக்கள் படும் கஷ்டங்கள், துன்பங்கள் ஆகியவற்றில் பங்கெடுத்தார்கள். இதன் விளைவு யாசீன் மாலிக்கையும், JKLF-யும் அறியாத காஷ்மீரிகள் இல்லை என்ற நிலை உருவானது. ஜனநாயக அடிப்படையில் அறிவுரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் துடிப்பு மிக்க இளைஞர் தான் யாசீன் மாலிக். பலமுறை அராசாங்கத்தின், அதிகாரவர்க்கத்தின் கோரப்பிடியினால் கைது செய்யப்பட்டு சிறைகளை இருப்பிடமாக்கி கொண்டவர். காஷ்மீர் மக்களின் விடுதலைக்காக போராடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக ராஜாஸ்தான், காஷ்மீர், டெல்லி என பல சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏன் இந்த போராட்டம்? என்பவர்களுக்காக இந்த ஒற்றை பத்தி பதில் சொல்லும். இந்தியா காஷ்மீரை தன் கட்டுபாட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காய் 1 லட்சத்திற்க்கும் அதிகமான ராணுவ வீரர்களை அங்கே குவித்துள்ளது. அதன் விளைவு காய்கறி வாங்க கூட 10 ராணுவ அரண்களை கடந்து செல்ல வேண்டும். 9 அரண்களை கடந்து செல்லும் போது 10 வது அரணில் தீவிரவாதி என்று கூறி கொலை செய்யப்படலாம் என்ற அடக்கு முறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் கேட்பாரின்றி மக்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்துவிடும் உரிமை இந்திய ராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த ராணுவ அதிகாரிகளாலும், அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் அதிகாரவர்க்கதினராலும் தங்களது கற்புகளை இழந்து, கணவன்களை இழந்து, குழந்தைகளை இழந்து தவிக்கும் காஷ்மீர் பெண்களின் கண்ணீருக்கான போராட்டம் தான் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனியின் (JKLF) போராட்டம்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாராக வருகை தந்திருந்தார் இந்த உரிமைக்கான போராட்டத்தின் சொந்தகாரரான யாசீன் மாலிக். அவர் தமிழகத்திற்கு
வருகை தந்ததற்காக பல கருத்துக்கள் உலா வருகின்றன. பிரிவினைவாதத்தை தூண்டும் காஷ்மீர் தீவிரவாதி என்றும், அவரை தமிழகத்திற்கு அனுமதித்தது அபாயகரமானது என்றும் வழக்கம் போல் தன் அரிப்பை அறிக்கை மூலம் தணித்துள்ளார் ப.ஜ.காவின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். வெளிநாட்டுடன் தொடர்புடையவர் என்று பலமுறை கைது செய்யப்பட்ட யாசீன் மாலிக் எப்படி தமிழகம் வந்தார், இந்திய இறையாண்மையை கேள்வி கேட்டு இந்தியாவை துண்டாட துடிக்கும் அவருக்கும் அவரை அழைத்து வந்தவர்களுக்கு என்ன தொடர்பு? இதனை முளையிலேயே கிள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். யாசின் மாலிக் ஆதரவால் சீமானுக்கு என்ன லாபம்? காஷ்மீர் பயங்கரவாத சக்திகளிடம் ஏன் இந்த அக்கறை? என்ன ஆதாயம்? என்று தமிழகத்தில் இணக்கமாக வாழ்ந்த மக்களை மதத்தின் பெயரால் துண்டாடி கொண்டிருக்கும் இந்து முன்னனி தலைவர் ராமகோபாலன் கருத்து தெரிவித்துள்ளார்..

உரிமைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றால், 1998-ல் தில்லியில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரஸ் கட்சியும், 2002-ல் குஜாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்ற பாஜகா கட்சியும் தான் பயங்கரவாத கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி அல்ல. பிரிவைனைவாதத்தின் பெயரால் மக்களை கொன்றொழிக்கும் ராஜபக்சேக்களையும், மதவாதத்தின் பெயரால் அப்பாவிகளை அழித்தொழிக்கும் நரேந்திர மோடிகளையும் மேடைகளில் அமர்த்தி அழகு பார்க்கும் காங்கிரஸ்ஸும், பாஜாகாவும் பயங்கரவாதத்திற்கு உதவி செய்கின்ற கட்சிகளே தவிர யாசீன் மாலிக் அல்ல. அவர் ஒரு சுதந்திர மனிதர். உரிமைகளை இழந்து, இழப்புகளுக்கு மத்தியில் வாழும் மனிதர்களுக்கு தான் தெரியும் அதன் வலி என்னவென்று. அந்த வலிதான் யாசீன் மாலிக்கை தமிழகத்திற்கு அழைத்து வந்திருக்கின்றது. அதே வலி இந்தியாவில் பல பாகங்களுக்கும் அழைத்து செல்லும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இல்லை.

thanks : வலசை பைசல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...