Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 18, 2010

வீராணம் ஏரியை பார்வையிட்ட மத்தியக் குழுவினர்

சிதம்பரம், டிச. 17: வெள்ளப் பெருக்குக்கு காரணமான கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு ஆகிய பகுதிகளை மத்தியக் குழுவினர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய உள்துறை இணைச் செயலர் எல்.விஸ்வநாதன் தலைமையில் மத்திய திட்டக் குழு முதுநிலை ஆராய்ச்சி அலுவலர் ஏ.முரளிதரன், மத்திய நிதி அமைச்சக் உதவி இயக்குநர் ஜிதேந்திரகுமார், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலர் எஸ்.எஸ்.பிரசாத், வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி ஆகியோர் கொண்ட குழுவினர் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளச் சேதப்பகுதிகளையும், நீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்கள், வெற்றிலை, மஞ்சள், கருணை உள்ளிட்ட பணப் பயிர்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் வெள்ளப்பெருக்கின்போது வெள்ளாற்றில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி 86 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதை மத்தியக் குழுவினர் சென்று பார்வையிட்டு கேட்டறிந்தனர். அதனால் ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்தும் அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தனர். பின்னர் வீராணம் ஏரியில் 44.90 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஏரியிலிருந்து நீர் திறந்துவிடப்படுவதால் ஏற்படும் வெள்ளப் பெருக்கு குறித்தும், தடுப்பு நடவடிக்கை குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மத்தியக் குழுவினர் கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் வெள்ளச் சேதமடைந்த திருநாரையூர், சர்வராஜன்பேட்டை, வீரநத்தம், கீழவன்னியூர், கோப்பாடி, பூலாமேடு, நந்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் நீரில் மூழ்கி அழுகி போன பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
வீரநத்தம் கிராமத்தில் விவசாயி கோபாலகிருஷ்ணன் மத்தியக் குழுவினரிடம் ஆண்டு தோறும் மணவாய்க்கால் நீரில் வெள்ளப் பெருக்கெடுத்து நெற்பயிர்கள் பாழாகிறது. ஒவ்வொரு முறையும் மத்தியக் குழு வந்து பார்த்து செல்கிறது. முழுமையான நிவாரணமும் வழங்கப்படவில்லை.

வெள்ளச் சேதத்தை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. மணவாய்க்கால் நீர் வயல்களுக்கு வராமல் கொள்ளிடத்தில் திருப்பிவிட திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்தியக் குழுவினரிடம் தெரிவித்தார். அதற்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் மணவாய்க்கால், வெள்ளியங்கால்ஓடை, பாசிமுத்தான்ஓடை ஆகியவற்றின் கரைகளை பலப்படுத்த ரூ. 93 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது என மத்தியக் குழுவினரிடம் தெரிவித்தார்.

மத்தியக் குழுவினருடன் வெள்ள நிவாரண சிறப்பு ஆணையர் ககன்தீப்சிங்பேடி, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், வருவாய் நிர்வாக ஆணையர் (நிவாரணம்) நாகராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன், பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் நஞ்சன், கொள்ளிடம் வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. துரை.ரவிக்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.
நன்றி:தினமணி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...