Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 04, 2012

எத்தனை வழக்கு போட்டாலும் அஞ்சமாட்டோம்!-MRK பன்னீர்செல்வம்

கடலூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதை தொடர்ந்து கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அவரது மனைவி செந்தமிழ்செல்வி, மகன் கதிரவன் உள்ளிட்டோர் மீது மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 3.10.2011 அன்று வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை தொடர்பாக மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டு 3 பேருக்கும் சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் செந்தமிழ்செல்வி, கதிரவன் ஆகியோர் கடலூர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகினர்.

வழக்கறிஞர்கள் சிவராஜ், வனராசு, மனோகரன், சக்திவேல், சுந்தர் உள்ளிட்டவர்கள் முன்னாள் அமைச்சர் தரப்பில் வாதிட்டனர். நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ் வழக்கை விசாரித்து வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா அரசு திமுக முன்னாள் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் மீது சொத்து குவிப்பு, நிலஅபகரிப்பு உள்ளிட்ட பொய் வழக்குகள் போட்டு திமுகவினர் தான் அதிகளவு சொத்து குவித்துள்ளனர் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்க நினைக்கிறார். இது அரசின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. முதல்வராக இருந்த போது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர் ரூ.60 கோடிக்கு ஊழல் செய்துள்ளார். இதை மறைக்க தற்பொழுது திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டுள்ளார். இதே நிலையில் வழக்கில் உள்ள ஜெயலலிதா வாய்தா வாங்கி வருகிறார். இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். எவ்வளவு வழக்கு போட்டாலும் எதற்கும் அஞ்சாதவர்களாக இருப்போம்.

 தொடர்ந்து மக்கள் சேவையை செய்து வருவோம். தற்பொழுது முழுமையான சேவை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆடிப்பெருக்கின் போது திமுக ஆட்சியில் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் தற்பொழுது காவிரியில் தண்ணீர் இல்லை. பொதுமக்களும், புதுமண தம்பதிகளும் வானத்தையும், பூமியையும்
வேடிக்கை பார்த்து நிற்கிறார்கள். விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தவித்துள்ளனர். திமுக மீது எவ்வளவு பொய் வழக்கு தொடுத்தாலும் அது நிலைத்து நிற்காது. இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார். திமுக நிர்வாகிகள் தங்கராசு, ஏ.ஜி ராஜேந்திரன், ராஜா, வாஞ்சிநாதன், குணசேகரன், கோவளன், வெங்கட்ராமன் கவுன்சிலர்கள் நடராஜன், தமிழ் உள்ளிட்ட ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். இதனால் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
-தினகரன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...