Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 15, 2012

மக்கா உச்சிமாநாடு ஒன்று கூடிய முஸ்லிம் தலைவர்கள்!


ஜித்தா:உள்நாட்டு பிரச்சனைகளும், ஆக்கிரமிப்பு முயற்சிகளும் மேற்காசியாவில் அமைதிக்கு பங்கம் விளைவித்து வரும் சூழலில் சமாதானம் மற்றும் ஒற்றுமையின் வழிகளை ஆராயவும், தேசங்களை கடந்த கூட்டு ஒருமைப்பாட்டு உணர்வை தொடர்ந்து நிலைநாட்டவும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மக்காவில்கூடியுள்ளனர். 
சவூதி அரேபியாவின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ்வின் அழைப்பின் பெயரில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளும் இந்த உச்சிமாநாடு மக்காவில் உள்ள ஸஃபா அரண்மனையில் துவங்கியுள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போரும், மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் அதிகரித்துள்ள சூழலில் மன்னர் அப்துல்லாஹ் இந்த உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சிரியா, மியான்மர் பிரச்சனைகளுடன் ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் புதிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும், எகிப்து ஸினாயில் நடந்த தாக்குதலும் இந்த உச்சிமாநாட்டில் தீவிரமாக விவாதிக்கப்படும்.
சிரியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை கொடூரமாக அடக்கி ஒடுக்கும் பஸ்ஸாருல் ஆஸாதின் முயற்சிகளையும், அதற்கு துணைபோகும் ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் நிலைப்பாடுகளுக்கும் எதிராக பொது கருத்தை உருவாக்குவதே இம்மாநாட்டின் முக்கிய அஜண்டா ஆகும்.
ஆஸாத் அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு தடைகள் உள்பட அழுத்தங்களை கொடுக்கும் தந்திரங்களை மேற்கொள்ள சவூதி அரேபியாவின் தலைமையில் அரபு நாடுகள் முயன்று வருகின்றன. இதுத்தொடர்பாக ஐ.நா பொது அவையில் சவூதி அரேபியா கொண்டு வந்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியது. அதேவேளையில் ஷியா அலவி பிரிவைச் சார்ந்த பஸ்ஸாரை ஆதரிப்பதால் ஈரானுக்கு எதிராக அரபுலகில் கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இவ்விவகாரத்தில் அரபுக்களின் பொதுவான உணர்வை ஈரானுக்கு தெரியப்படுத்துதல் மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும். உச்சிமாநாட்டிற்கு மன்னர் அப்துல்லாஹ், ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதிற்கு அழைப்பு விடுத்திருந்தார். மன்னரின் அழைப்பை ஏற்று நஜாதும், அவரது குழுவினரும் திங்கள்கிழமையே சவூதி அரேபியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
மியான்மரில் இனப்படுகொலைக்கு பலியாகும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சனைக் குறித்து மாநாடு தீவிரமாக விவாதிக்கும் என்று ஒ.ஐ.சியின் பொதுச்செயலாளர் இக்மாலுத்தீன் இஹ்ஸான் ஓக்லு தெரிவித்துள்ளார். ராக்கேன் மாநிலத்தில் இருந்து புலன்பெயர்ந்து வரும் மியான்மர் முஸ்லிம்களை கைவிட்டு விடாதீர்கள் என்று பங்களாதேஷுக்கு சவூதி அரேபியா ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது.

ரோஹிங்கியா முஸ்லிம்களின் மறுவாழ்விற்கு 50 கோடி டாலர் உதவித்தொகையை சவூதி அரேபியா அனுமதித்துள்ளது.
ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் புதிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சிமாநாட்டில் கருத்தொற்றுமையான முடிவு எடுக்கப்படும். கடந்த தினங்களில் ஸினாயில் எகிப்திய ராணுவ வீரர்களை கொலைச்செய்த சம்பவத்தின் பின்னணியில் சியோனிச ஆக்கிரமிப்பை சதித்திட்டத்தின் வாயிலாக நடைமுறைப்படுத்த திட்டமிடும் இஸ்ரேலின் முயற்சியை எகிப்தும், சவூதி அரேபியாவும் கவலையோடு காண்கின்றன. குத்ஸ் மற்றும் ஃபலஸ்தீன் மக்களின் பாதுகாப்பிற்கு முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து  முயற்சிக்க வேண்டும் என்றும், மஸ்ஜிதுல் அக்ஸாவின் முற்றத்தில் யூத தேவாலயம் கட்டுவதற்கான இஸ்ரேலின் சதித்திட்டத்திற்கு எதிராக அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ள அரபுலீக்கின் துணை செயலாளர் முஹம்மது ஸபீஹ்  கோரிக்கை விடுத்துள்ளார்.
உச்சிமாநாட்டிற்கு பல்வேறு முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் சனிக்கிழமை முதல் வரத்துவங்கினர். மாநாட்டிற்காக விரிவான ஏற்பாடுகளை சவூதி அரேபியா அரசு மக்காவிலும், ஜித்தாவிலும் செய்துள்ளது. மாநாட்டுச் செய்திகளை சேகரிக்க உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் ஜித்தாவில் குவிந்துள்ளனர்.
source:aasiyananban

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...