Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 16, 2012

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெறுவதற்கான ஆலோசனைகள்-

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, நாட்டின் உயர்ந்த பதவியை அடைய ஆசை மட்டுமே போதாது. அதற்கான முயற்சியும், நுணுக்கமும் கட்டாயம் தேவை. முதல்நிலை தேர்வுக்கான பாடத்திட்டம் மாறியுள்ள நிலையில், மாறுதல் குறித்து தெளிவாக அறிந்து, அதற்கு தயாராகும் முறைகள் குறித்தும் நன்கு தெரிந்துகொள்வது அவசியம்.

முதல்நிலையில், சிவில் சர்வீஸ் திறனாய்வு தேர்வு(பிரிலிமினரி) என்பதில், தலா 200 மதிப்பெண்களைக் கொண்ட, 2 ஆப்ஜெக்டிவ் முறையிலான கேள்வி தாள்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்வித் தாளுக்கும் 2 மணிநேரங்கள் ஒதுக்கப்படும். ஒரு தாள் பொதுஅறிவு சம்பந்தமானது, இன்னொரு தாள் பொது திறனாய்வு தொடர்பானது(முதலில் இந்த தாள் விருப்பப் பாட தாளாக இருந்தது). குறைந்தளவு பணியிடங்களுக்கு மிக அதிகளவிலான ஆட்கள் நாடு முழுவதிலுமிருந்தும் போட்டியிடுவதால், போட்டியானது மிகவும் கடுமையாக இருக்கும். பல நபர்கள் பல தடவைகள் முயற்சி செய்து, இந்தத் தேர்வில் தேறுகிறார்கள்.

பொதுவாக, கேள்வித்தாள்களில் மாற்றங்கள் செய்வதானது, பல மாணவர்களை கலக்கமடையச் செய்கிறது. பலருக்கு கணிதத்தைக் கண்டால் பயம். ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றமானது, பகுப்பாய்வு திறன் சம்பந்தப்பட்டதே ஒழிய, கணிதம் தொடர்பானதல்ல.
சிவில் சர்வீஸ் தேர்வானது, சிறந்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுவதாகும். முதல்நிலைத் தேர்வுகளைப் பற்றி இருக்கும் ஒரு தவறான கருத்து என்னவெனில், அத்தேர்வானது, வெறும் எண்கள் மற்றும் சாதாரண விஷயங்களைப் பற்றியது என்பதாகும். ஆனால் அது அப்படியல்ல. தேர்வில் வெற்றிபெற ஒருவருக்கு நல்ல தன்னம்பிக்கையும், சிறந்த மனத் தயாரிப்பும் இருக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வைப் பொறுத்தமட்டில், ஒருவரது ஆற்றல் தக்கவைப்பு, கருத்துத் தெளிவு, நுட்பமான முறையில் சரியான மாற்று வழிகளை அடையாளம் காணும் திறன் போன்ற பலவித அம்சங்களை மதிப்பிடும் ஒரு தேர்வாக இந்தத் தேர்வு இருப்பதால், இத்தேர்வுக்கு தயாராகும் செயல்பாடானது, நன்கு திட்டமிடப்பட்டதாக இருக்க வேண்டும். மேற்கூறிய சோதனை அம்சங்களின் மூலமாக ஒருவரின், விரைந்து முடிவெடுக்கும் திறன் மதிப்பிடப்படுகிறது.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில், செய்யப்பட்டுள்ள புதிய மாற்றத்தின் நோக்கமானது, ஒருவரின் மொழித்திறன், பகுப்பாய்வு மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை சோதிப்பதாகும். இத்தகைய தேர்வுக்கு தயாராதல், சில மாதங்களில் நடந்துவிடக் கூடியதல்ல. வருடக்கணக்கில் தயாராக வேண்யதிருக்கலாம். எனவே, சிவில் சர்வீஸ் தேர்வெழுத நினைக்கும் மாணவர்கள், அதற்கான தயாரிப்பை, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக தொடங்கிவிட வேண்டும்.

நாம் இப்போது கேள்வித்தாளின் தன்மைகளைப் பற்றி பார்ப்போம்

முதல்தாள்(பொதுஅறிவுப் பகுதி)

இந்தப் பகுதியில், இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய அரசியல், அடிப்படை பொருளாதார புரிதல், புவியியல், நடப்பு சம்பவங்கள் மற்றும் பொது அறிவு போன்றவற்றை உள்ளடக்கி, பரந்த அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

இரண்டாம் தாள்

இப்பகுதியில், கணிதம், ஆங்கிலம், காரணகாரிய அறிவு, பகுப்பாய்வு திறன் மற்றும் சமூகத் தொடர்புத் திறன் போன்றவை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இந்த 2ம் தாள், முதல் தாளிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கிறது.

இந்த பிரிலிமினரி தேர்வை எழுதுவதற்கு ஒருவர் உடலளவிலும், மனதளவிலும் தயாராக வேண்டும். இந்தத் தேர்விலிருக்கும் சிக்கலே, கேள்விகளுக்கான பதிலை குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிப்பதுதான். ஒருவர் ஒரு கேள்விக்கு, சராசரியாக, 40 விநாடிகளே ஒதுக்க முடியும். மேலும், இந்தத் தேர்வானது, அதிக வெப்பம் நிலவும் மே மாதத்தில் நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. பல தேர்வு மையங்களில் முறையான மற்றும் போதுமான வசதிகள் செய்யப்பட்டிருப்பதில்லை என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். இதனால், பலருக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, தேர்வெகூதும் ஒருவர் அழுத்தத்திலிருந்து விடுபட, யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

தற்போது, பிரிலிமினரி தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பதைப் பற்றி பார்ப்போம். இத்தேர்வானது, பலவித சாய்ஸ் கேள்விகளை உள்ளடக்கியதாக இருப்பதால், சிறப்பாக தயாராவதற்கு பொருத்தமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இத்தேர்வைக் குறித்து முதலில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், இத்தேர்வானது, ஒருவரின் கூர்மையான நினைவுத்திறன் மற்றும் அடிப்படை நினைவுப்படுத்தும் திறன் ஆகியவற்றை சோதிப்பதன் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைத்தான்.

சார்ட்டுகளை தயார்செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளின் மூலமாக ஒருவர் தனது நினைவுத்திறனை அதிகரிக்க முடியும். கேள்வித்தாளில் விளக்க விவரங்கள் தொடர்பான அம்சங்களைப் பார்க்கும்போது ஒருவர குழப்பமடையலாம். இத்தகைய விளக்க விவரணங்களை எதிர்கொள்ள (பேக்ட்ஸ் அண்ட் பிகர்ஸ்) அவற்றை சார்ட்டில் அமைத்தும், அவற்றை அட்டவணைகளாவோ அல்லது வரைகட்டங்களாகவோ(கிராப்ஸ்) அமைப்பதன் மூலமும் எளிதாக்கி புரிந்துகொள்ளலாம்.

இதைத்தவிர, சிக்கலான விஷயங்களை தேர்வின்போது நினைவில் கொள்வதற்கு, ஒவ்வொரு தலைப்பிலும் சுருக்கமான குறிப்புகளை எடுத்துக்கொள்ளவும். இதனால், தேர்வுக்கு முந்தைய நாள் முழு பாடத்திட்டத்தையும் திருப்புதல் செய்ய ஏதுவாக இருக்கும்.

கடினமான கருத்துக்களைப் புரிந்துகொள்வதை எளிதாக்க, இணைப்பு வார்த்தைகள் மற்றும் டயகிராம்களைப் பயன்படுத்துவது சிறந்தது. மேலும், அப்ரிவியேஷன் பயன்படுத்துவதும் சிறந்தது. ஏனெனில், பாடத்திட்டங்கள் விரிவான அளவில் இருப்பதால், அப்ரிவியேஷன்கள், எளிதாக நினைவில் கொண்டுவர உதவும். பட முறையில், தேதிகளையும், விரிவான விவரணங்களையும் நினைவில் கொண்டுவருவது எளிது மற்றும் சிக்கலான பெயர்கள் மற்றும் இடங்களை சிறிய மற்றும் எளிமையான வார்த்தைகளில் மாற்றிக்கொள்ளவும். தொடர்ச்சியான திருப்புதலை மேற்கொள்வதே அனைத்தையும்விட சிறந்த நுட்பமாகும். இதனால், அதிகமான விஷயங்களை தொடர்ந்து நினைவில் வைத்துக்கொள்ள முடியும். தினமுறை, வாரமுறை மற்றும் மாதமுறையில், திருப்புதலுக்காக நேரம் ஒதுக்குவது சிறந்த பயனைத் தரும்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் பல மாணவர்கள் செய்யும் முக்கிய தவறு என்னவெனில், ஏராளமான விஷயங்களைப் படித்துவைத்துக் கொண்டு, கடைசியில் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போய்விடுவதுதான். தொடர்புள்ள மற்றும் தொடர்பற்ற விஷயங்களுக்கிடையேயான வேற்றுமைகளை மட்டுமே ஒருவர் அடையாளம் காணமுடியும். பிரிலிமினரி தேர்வு என்பது ஆரம்ப நிலையிலேயே கழித்துக்கட்ட நடத்தப்படுவது என்பதால், தேவையான தகவல்களை மட்டுமே மனதில் இறுத்திக்கொண்டு, பிறவற்றை விட்டுவிட வேண்டும். படிக்கும்போது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவது சிறந்தது என்றாலும், முற்றிலும் சிறந்த வழி என்னவென்றால், முந்தைய கேள்வித்தாள்களை வாங்கி படிப்பதே ஆகும். அதேபோன்று, நடப்பு உலக நிகழ்வுகள் பற்றியும், அதுதொடர்பான பிற தகவல்களைப் பற்றியும் மிகவும் தெளிவான அறிவுடன் இருக்க வேண்டும்.

இந்த பிரிலிமினரி தேர்வைப் பொறுத்தவரை தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவெனில், விஷயங்களை வெறுமனே மனனம் செய்வது மட்டுமல்ல, அதன் கருத்துக்களை தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு கருத்தும், அதன் தோற்றம், நிறைகள் மற்றும் குறைகளோடு புரிந்துகொள்ளப்படுவதுடன், அதன் தொடர்புடைய விஷயங்களோடு பகுப்பாய்வு செய்யப்பட்டு, அந்த வருடத்தில் நிகழ்ந்த பிற சம்பவங்களுடன் அதனை தொடர்புபடுத்தவும் வேண்டும். பொதுவாக, இத்தேர்வின் கேள்விகள் 10 மற்றும் 12 வகுப்பு நிலைகளிலேயே இருக்கும்.

இந்த பிரிலிமினரி தேர்வில், கொடுக்கப்பட்டுள்ள பலவிதமான சாய்ஸ்களில், சரியான சாய்ஸ் தேர்வெழுதுபவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா? என்பது கவனிக்கப்படும். எனவே, பழைய கேள்வித்தாள்களைப் பார்த்து, அந்தக் கேள்விகளை பகுப்பாய்வு செய்து பயிற்சி எடுக்க வேண்டும். மேலும், பொதுஅறிவு, கணிதம் மற்றும் பொதுத்திறன்கள் தொடர்பான கேள்விகளில் ஒரு மாதிரித் தேர்வு எழுதிப் பார்த்து பயிற்சியெடுப்பதானது சிறப்பானது.

இரண்டு பிரிலிமினரி கேள்வித் தாள்கள் ஒவ்வொன்றுக்கும் 2 மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டாலும், வருகைத்தாளை நிரப்புதல் உள்ளிட்ட நடைமுறைகளிலேயே அதிக நேரம் செலவாகிவிடுகிறது. எனவே, தேர்வுக்கு சிரத்தையுடன் தயாராகும் அதேநேரத்தில் நேர மேலாண்மை தொடர்பான பயிற்சியும் அவசியம்.

ஒரு கேள்விக்கான சரியான பதில் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. அந்த பதிலை உரிய தாளில் சரியான குறிப்பிடுவதும் முக்கியம். வேகமும், நுட்பமும் முக்கியம். எனவேதான், மாதிரி கேள்வித்தாள்களை வைத்து அடிக்கடி பயிற்சி எடுப்பதானது, உங்களுக்கு பெரிதும் துணைபுரியும்.

சரியான ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுப்பதில், நமது சமயோசித புத்தியானது முக்கியப் பங்கை வகிக்கிறது. நெகடிவ் மதிப்பெண்கள் இருப்பதால், உத்தேச ஆப்ஷன்களை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, நன்கு தெரிந்து ஆப்ஷன்களை குறிப்பிடுவதே நல்லது.

பிரிலிமினரி தேர்வுக்காக எந்த விஷயத்தைப் படித்தாலும், அதை அதனுடன் தொடர்புடைய பிற விஷயங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றுடன் சேர்த்துப் புரிந்துகொண்டு, அதனோடு தொடர்புபடுத்தி பழகிக்கொள்ள வேண்டும். இதுதான் வெற்றிக்கு வழி வகுக்கும்.

முதன்மை தேர்வுக்கு(மெயின்) ஏற்ற பாடத்தை தேர்வு செய்வது எப்படி?

முதன்மைத் தேர்வில் பொருத்தமான பாடத்தை தேர்வுசெய்வதானது, பல மாணவர்களுக்கும் சிக்கலான ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. தற்போது, பிரிலிமினரி தேர்விலிருந்த விருப்பப்பாட முறை நீக்கப்பட்டு விட்டதால், மாணவர்களுக்கா சிக்கல் சற்று எளிதாகிவிட்டது. முதன்மைத் தேர்வுக்கான பாடத்தை வெகு சீக்கிரமே தேர்வுசெய்து விட்டால்தான், அதற்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் குறிப்புகளைப் பெறுவதை எளிதாக்க முடியும் மற்றும் சரியான நேரத்திற்குள் படித்தலுக்கான குழுக்களை உருவாக்க முடியும்.

நாம் தேர்வுசெய்யும் விருப்பப் பாடமானது, நமக்கு நன்கு அறிமுகமான ஒன்றாக இருக்க வேண்டும் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு வரையிலாவது படித்த ஒன்றாக இருக்க வேண்டும். சரியான அறிமுகமற்ற பாடத்தை எக்காரணம் கொண்டும் தேர்வுசெய்யக்கூடாது. விருப்பப் பாடத்தை தேர்வுசெய்வதானது முற்றிலும் உங்களது ஆர்வம் சம்பந்தப்பட்டது என்றாலும், அப்பாடம் தொடர்பாக கிடைக்கும் உபகரணங்கள் பற்றி யோசிப்பதும் முக்கியம்.

அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளைப் படித்த மாணவர்கள்கூட, தங்களின் விருப்பப் பாடங்களாக வரலாறு, சமூகவியல், ஆன்த்ரோபாலஜி, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல் மற்றும் பொது நிர்வாகம் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதற்கு காரணம், மிக அதிகளவிலான படித்தல் உபகரணங்கள் இப்பாடங்களில் எளிதாக கிடைப்பதே காரணம்.

ஒரே பாடத்தை தேர்வுசெய்த நபர்களிடையேதான் அதிக போட்டி நிலவுகிறது. எனவே, தேர்வில் வெற்றிபெற, ஒருவர் தனது விருப்பப் பாடத்தில் மிகவும் தேர்ச்சிப் பெற்றவராக இருக்க வேண்டும்.

நீங்கள் 2 வருடம் அனுபவம் வாய்ந்த எலக்ட்ரிகல் இன்ஜினியராக இருந்தால், விருப்பப் பாடமாக பொது நிர்வாகம் அல்லது சமூகவியல் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்யலாம். கடந்த கால பாடத்திட்டங்கள் மற்றும் கேள்வித்தாள்கள் மற்றும் கடந்தகால நடைமுறைகளை நன்கு ஆய்வு செய்யவும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுத்தப் பாடத்தில் அனுபவம் பெற்ற சீனியர்கள் மற்றும் சக மாணவர்களின் ஆலோசனைகளையும் கேட்கவும். மேலும், எந்தப் பாடமும் மோசமானதல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

நீங்கள் ஒருநாளைக்கு 4 முதல் 5 மணி நேரங்கள் வரை செலவுசெய்ய முடிந்தால், வரலாறு ஒரு நல்ல பாடம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 மணிநேரங்கள் செலவுசெய்ய முடிந்தால் புவியியல் சிறந்த பாடம். 3 மணிநேரங்களுக்கு மேலாக செலவுசெய்ய முடிந்தால் பொது நிர்வாகம் சிறந்த பாடம். 2 மணி நேரங்களுக்கு மேலாக என்றால் சமூகவியல் சிறந்த பாடம். எனவே, நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிப்பீர்கள் என்பதை வைத்தும், உங்களுக்கு அந்தப் பாடத்தில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதை வைத்துமே விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு சிறந்த நினைவுத்திறன் இருந்தால், டெக்னிக்கல் பாடங்களைவிட, சமூகவியல் சார்ந்த பாடங்களே சிறந்தது.

கீழ்கண்ட சில பாடங்களின் இணைந்த சேர்க்கையானது(காம்பினேஷன்) யு.பி.எஸ்.சி. அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை;

* அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் பொது நிர்வாகம்

* வணிகம் மற்றும் மேலாண்மை

* ஆன்த்ரோபாலஜி மற்றும் சமூகவியல்

* கணிதம் மற்றும் புள்ளியியல்

* விவசாயம் மற்றும் விலங்கு பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல்

* மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம்

* விலங்கு பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியல்

* பொறியில் படிப்பின் ஏதேனும் 2 பிரிவுகள்

* இரண்டு இலக்கியங்களின் தொகுப்புகள்

இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றி அனைவருமே அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். என்னதான் விழுந்து விழுந்து படித்து, பெரிய மையங்களில் பயிற்சி எடுத்தாலும், சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமெனில், ஒருவருக்கு அதீத தன்னம்பிக்கையும், சிறந்த நேர்மறை எண்ணமும் இருக்க வேண்டும். இந்தப் பண்புகள் இருந்தால் ஒழிய, சிவில் சர்வீஸ் தேர்வில் தேறுவது கனவாக மட்டுமே இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...