Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 14, 2012

ராணுவம் ஆட்சியை கவிழ்ப்பதை தடுக்க பாக்.அரசு தீவிர முயற்சி

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ராணுவத்திற்கும், அரசிற்கும் இடையே கருத்துவேறுபாடு உச்சக்கட்டத்தை அடைந்துள்ள சூழலில் ராணுவம் ஆட்சியை கவிழ்ப்பதை தடுப்பதற்கு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ராணுவ புரட்சிக்கு வாய்ப்பு இருப்பதை உணர்ந்த பிரதமர் கிலானி பாகிஸ்தானில் உயர் பிரிட்டீஷ் ஹைக்கமிஷனர் தாம்ஸனை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உதவி தேடியதாக டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், கிலானியின் கோரிக்கைக்கு பிரிட்டன் அளித்த பதில் குறித்து தகவல் கிடைக்கவில்லை. ராணுவம் ஆட்சியை கவிழ்ப்பது எந்த நேரத்திலும் நிகழலாம் என்ற பீதி உயர் அரசு வட்டாரங்களில்
நிலவுகிறது.

ராணுவத்திற்கு இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இருந்து உதவி கிடைக்கலாம் என அரசு அஞ்சுகிறது என டான் அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ராணுவத்திற்கும், தங்களுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தரின் உதவியோ அல்லது அமெரிக்கா, வளைகுடா நாடுகள் ஆகியவற்றின் இதர உதவிகளையோ பாக்.அரசு தற்போது எதிர்பார்க்கிறது. ஆளுங்கட்சியான பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டி(பி.பி.பி) இதர கட்சிகளின் உதவியை கோரியுள்ளது. மேலும் எதிர்கட்சியின் உதவியையும் எதிர்பார்க்கிறது.

ஏகாதிபத்தியமா? ஜனநாயகமா? எது வேண்டும்? என்பதை பாராளுமன்றம் தீர்மானிக்கும் என நேற்று கிலானி வெளியிட்டுள்ள அறிக்கை எதிர்கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து வெளியிடப்பட்டது என கருதப்படுகிறது.

அரசியல் தலைவர்களிடமிருந்து பூரண நம்பிக்கையை பதிவுச் செய்யும் தீர்மானத்தை ஆளுங்கட்சி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வருகிற திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து விவாதம் நடைபெறும். ஒரே சமயத்தில் உணர்ச்சிகரமாகவும், சவால் விடுக்கும் விதமாகவும் நேற்று கிலானி பாராளுமன்ற உரை அமைந்திருந்தது.

“யாருடைய ஆதரவையும் நாங்கள் யாசிக்க மாட்டோம். ஆனால், அரசு ஏதேனும் தவறு இழைத்து இருந்தால் ஜனநாயகமும், பாராளுமன்றமும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அர்த்தமல்ல” என கிலானி கூறினார்.

அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையே கருத்துவேறுபாடு உச்சக்கட்டத்தை அடைந்து, எந்நேரமும் ராணுவம் ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற சூழலில் அரசின் எதிர்காலத்தை இனி உச்சநீதிமன்றம் தீர்மானிக்கும்.

சர்தாரி உள்ளிட்ட பிரமுகர்கள் மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் வழக்குகளில் விசாரணை திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. ஊழல் வழக்குகளில் விசாரணைக்கு தயாராகாத அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துவிட்டது. இச்சூழலில்தான் அரசியல் நோக்கர்களும், ஊடகங்களும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காத்திருக்கின்றனர். அரசியல் சட்ட காரணங்களை காட்டி அரசை கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் அதற்கு ராணுவத்திடம் இருந்து அனைத்துவிதமான ஆதரவும் கிடைக்கும் என கருதப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...