Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 06, 2012

31 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு தமிழகத்தில் 5.4 கோடி வாக்காளர்

சென்னை: தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.4 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் இது 60 சதவீதத்திற்கும் மேலானதாகும் தமிழககத்தில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதை வெளியிட்டு தலைமைத் தேர்தல்அதிகாரி பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 24-10-2011 அன்று முதல் வெளியிட தொடங்கினோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும், இடமாற்றம் செய்வதற்கும் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 11-ந் தேதி வரை பெறப்பட்டன.



இதில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்தன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 38 லட்சத்து 98 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. இவற்றை வட்டார அளவில் அதிகாரிகள் வீடுவீடாக சென்று சரிபார்த்தனர். இவற்றில் மொத்தம் 33 லட்சத்து 26 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.



இவற்றில் 15 சதவீதம் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவற்றில் 2 லட்சத்து 53 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டன.



24-10-2011 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4 கோடியே 73 லட்சத்து 58 ஆயிரம் ஆகும். இவற்றில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரம் ஆகும். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 35 லட்சத்து 49 ஆயிரமும், மற்றும் இதர வாக்காளர்கள் 1,568 பேர் ஆகும்.


5.04 கோடி வாக்காளர்கள்



தமிழக வாக்காளர் இறுதி பட்டியல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று வெளியிடப்பட்டது. இப்போது முதல் முறையாக தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 4 லட்சத்து 31 ஆயிரத்தை தாண்டியது. இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 53 லட்சத்து 35 ஆயிரம். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 50 லட்சத்து 93 ஆயிரம். இதர வாக்காளர்கள் 2 ஆயிரத்து 175. இதில் 21 வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்குவார்கள்.



2012-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 30 லட்சத்து 72 ஆயிரம் ஆகும்.



18 வயது முதல் 19 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் ஒன்றினை நடத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் தமிழ்நாட்டில் கடந்த 5-ந் தேதி தொடங்கி, வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. 18 வயது முதல் 19 வயது வரை உள்ள இளைஞர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இந்த கால கட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.



சோழிங்கநல்லூரில் வாக்காளர்கள் அதிகரிப்பு



தமிழ்நாட்டில் சோழிங்கநல்லூர் தொகுதியில்தான் அதிகபட்சமாக 13.47 சதவீதம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் 8 சதவீதம் அளவில் மிகவும் குறைந்த அளவில் வாக்காளர் எண்ணிக்கை உள்ளது.



புகைப்பட வாக்காளர் பட்டியல் 99.87 சதவீதம் தயாராகிவிட்டது. வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன்பு அரவாணிகள் 1,568 பேர் இடம் பெற்றிருந்தனர். இப்போது புதியதாக அரவாணிகள் 612 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.



18 வயது முதல் 19 வயது வரை உள்ள இளைஞர்கள் வாக்காளர்கள் 16 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு 8 லட்சம் பேர்தான் இருந்தனர். ஜனநாயகத்தின் நண்பர்கள் என்ற பெயரில் ஒரு குழு ஆரம்பித்து, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதேபோல பெண்களை வாக்காளர் பட்டியில் பெயர்களை சேர்ப்பதற்காக மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆன்லைன் மூலம் புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கு 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார் பிரவீன் குமார்.



சங்கரன்கோவில் இடைத் தேர்தல் குறித்து கேட்டபோது அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளு. ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகுதான் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் நடைபெறும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...