Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 12, 2012

குவாண்டனாமோ:மனித உரிமை மீறல்களின் 10 ஆண்டு

மனித உரிமை மீறல்களில் வரலாற்றின் எக்காலத்திலும் முதல் இடத்தை பிடிக்கும் குவாண்டானாமோ சிறைக் கொட்டகை நிறுவப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது.

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் போர்க்களத்தில் இருந்து பிடிக்கப்படும் நபர்களை சித்திரவதைச் செய்து சீரழிப்பதற்காக மட்டும் ஜார்ஜ் w புஷ் அரசாங்கத்தால் கியூபாவில் உள்ள குவாண்டனாமோவில் அமெரிக்க கடற்படை தளத்தில் பிரம்மாண்டமான சிறைக் கொட்டகை உருவாக்கப்பட்டது.

சிறைக்கைதிகளின் முதல் குழு 2002-ஆம் ஆண்டு ஜனவரி,11-ம் தேதி குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டு 10-வது ஆண்டு நிறைவுறுகிறது. ஆனால்,10 ஆண்டுகள் கழிந்த பிறகும் விசாரணை இல்லாமல் 171 சிறைக்கைதிகள் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முதல் கட்டமாக குவாண்டானாமோவில் அடைக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் பன்னிரெண்டு நபர்கள் இப்பொழுதும் அங்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு மட்டுமே இதுவரை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கு விசாரணை கூட நடத்தப்படவில்லை. குற்றவாளிகள் அல்லர் என்பதை கண்டறிந்த பிறகும் 89 பேரின் விடுதலைக் குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் 780 பேர் குவாண்டனாமோவின் இருட்டறைகளில் அடைக்கப்பட்டனர். 2008-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரக் ஒபாமா, குவாண்டனாமோவை மூடுவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால், 3 ஆண்டுகளை தாண்டிய பிறகும் ஒபாமா தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக ராணுவத்திற்கு எந்தவொரு நபரையும் காலவரையற்று விசாரணையில்லாமல் சிறையில் அடைக்கும் அதிகாரத்தை வழங்கும் மசோதாவில் ஒபாமா அண்மையில் கையெழுத்திட்டார்.

குவாண்டனாமோவில் அமெரிக்காவின் பயங்கரவாதத்தை சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல், ‘மனித உரிமைகள் மீறல்களின் வரலாற்றில் நீடிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த அடையாளம்’ என வர்ணிக்கிறது. குவாண்டனாமோ சிறைக் கொட்டகையின் 10-வது ஆண்டு நிறைவையொட்டி ஆம்னஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறுகிறது.

விசாரணை இல்லாமல் காலவரையற்று சிறையில் அடைக்கப்படும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவிற்கு நிர்பந்தம் அளிக்க ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது.

செப்டம்பர் 11-ஆம் தேதி உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் தாக்கப்பட்ட பிறகு அமெரிக்கா துவக்கிய ‘பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச போரின்’ மிச்ச மீதிதான் குவாண்டனாமோ. மனித உரிமை தொடர்பான அனைத்து சர்வதேச சட்டங்களையும் காற்றில் பறத்தி அமெரிக்கா அரசு குவாண்டனாமோவில் கொடூரங்களை அரங்கேற்றும் வேளையில் நிரபராதிகளான மக்களின் வாழ்க்கை சீர்குலைந்து போகிறது.

மனித உரிமைகளை குறித்து வாய்ச்சவடால் விடுத்து, மத்தியக்கிழக்கு நாடுகளிடம் மனித உரிமைகள் குறித்து உபதேசிக்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் சொந்த காலடியில் நடக்கும் கொடூரங்களை கண்டும் காணாதது போல் நடிக்கின்றனர். நவம்பரில் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் குவாண்டனாமோ ஒபாமா அரசின் தேர்தல் அஜண்டாவில் இடம்பெறாது. அதற்கு பதிலாக அமெரிக்காவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார நெருக்கடியும்தான் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...