Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 10, 2012

தானே புயலால் கடலூர் மாவட்டம் முற்றிலும் சேதம்: மத்திய குழுவினர் தகவல்

கடலூர்: தானே புயலின் தாக்குதலால் கடலூர் மாவட்டம் முற்றிலும் சிதைந்து போயுள்ளதாக சேதமதிப்பை பார்வையிட்ட மத்திய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. புயல் சேதத்தை தேசிய பேரழிவாக அறிவிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் ஆய்வுக்குழு கூறியுள்ளது.

தானே புயல்

கடந்த டிசம்பர் 30-ந் தேதி கரையை கடந்த தானே புயல் கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது. புயலால் கடலூர் மாவட்டத்தில் 41 பேர் பலியானார்கள், மூன்றரை லட்சம் வீடுகள் சேதம் அடைந்தன, ஒரு லட்சத்து 8 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள், முந்திரி, பலா, வாழை மரங்கள் அழிந்தன, 45 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுவை, கடலூரில் ஆய்வு


இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வந்த உள்துறை இணைச்செயலாளர் லோகேஷ் ஜா தலைமையிலான மத்திய குழுவினர் ஞாயிறுக்கிழமையன்று புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

திங்கட்கிழமை காலையில் கடலூர் வந்த ஆய்வுக்குழுவினர், மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி மற்றும் பேரிடர் கண்காணிப்பு சிறப்பு அதிகாரி அபூர்வா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இதனையடுத்து கடலூர் அருகே உள்ள தோட்டப்பட்டு பஞ்சாயத்துக்கு உள்பட்ட டி. குமாரபுரத்துக்கு சென்ற அவர்கள் அங்கு புயலின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததால் இடிந்து சேதம் அடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தை பார்வையிட்டனர். அதன்பிறகு காராமணிக்குப்பம் கிராமத்தில் ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தை பார்வையிட்டனர்.
விவசாயிகளுக்கு ஆறுதல்

பின்னர் நெல்லிக்குப்பம் சென்று வான்பாக்கத்தில் புயலால் சேதம் அடைந்த குடிசை வீடுகள், மின்கம்பங்களை பார்வையிட்டனர். புயலால் நாசமான நெற்பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்ட போது, விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே தங்களுக்கு ஏற்பட்ட சேதம் பற்றி எடுத்து கூறினார்கள். அவர்களுக்கு மத்திய குழுவினர் ஆறுதல் கூறினார்கள்.

முந்திரி மரங்கள் சேதம்

அதன்பிறகு பண்ருட்டிக்கு செல்லும் வழியில் உள்ள தென்னந்தோப்பில் புயலால் சேதம் அடைந்த நெற்பயிர்கள், கரும்பு, மணிலா, காய்கறி செடிகள் ஆகியவற்றை பார்வையிட்ட மத்திய குழுவினர் வாழப்பட்டு கிராமத்தில் சேதம் அடைந்த வாழைமரங்களை பார்வையிட்டனர்.

சாத்துபட்டு கிராமத்தில் புயலால் முறிந்து விழுந்த பலா மரங்களையும், முந்திரி மரங்களையும் பார்வையிட்ட மத்திய குழுவினர் முந்திரி, பலாவில் கிடைக்கும் வருமானம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். மேல்மாம்பட்டு, காடாம்புலியூர் உள்ளிட்ட கிராமங்களிலும் புயலால் சேதம் அடைந்த முந்திரி மரங்களை பார்வையிட்டனர்.

பின்னர் தாழங்குடா கிராமத்தில் பாதிக்கப்பட்ட படகுகள், தெருவிளக்குகள், தென்னை மரங்களையும், கடலூர் நகரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், அன்னவெளி கிராமத்தில் தென்னை மரங்கள், சத்திரம் அருகில் உள்ள காட்டுப்பாளையம், வெங்கடம்பேட்டை, வடதலைக்குளம் ஆகிய கிராமங்களில் முற்றிலும் சேதம் அடைந்த முந்திரி, வாழை பயிர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் புயல் பாதிப்பு குறித்து கேட்டு அறிந்தனர்.

தேசிய பேரழிவு

சேதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் ஜா, `தானே' புயலால் கடலூர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. புயலால் வேளாண்மை பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், வீடுகள் என அனைத்தும் பெரிய அளவில் சேதம் அடைந்து உள்ளன. தானே புயல் சேதத்தை தேசிய பேரழிவாக அறிவிப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். இதுபற்றி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். மின் கம்பங்களை சீரமைப்பதற்கு மத்திய மின் குழுவை கொண்டு வருவது பற்றியும் மாநில அரசுடன் கலந்து பேசிய பிறகே சொல்ல முடியும் என்றார்.

விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள்

இந்த நிலையில் செவ்வாய்கிழமையன்று விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ள மற்றொரு குழுவினர் புயலால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்து வருகின்றனர். அதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களிலும் மத்தியக்குழுவினர் புயல்சேதத்தை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து புதன்கிழமையன்று சென்னை வரும் குழுவினர் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் சந்தித்து ஆலோசிக்க உள்ளனர். இதனையடுத்து புயல் சேதம் பற்றிய அறிக்கையை இக்குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க்க 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படுவதாக மத்திய குழுவிடம் தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...