Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 22, 2011

இளைய சமூகத்தின் எழுச்சி - ASA

துனீஷியாவில் துவங்கி எகிப்தை ஆட்டிப்படைத்து லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், அல்ஜீரியா, யெமன், மொராக்கோ என தீவிரமடைந்துள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஆய்வுச் செய்யும்பொழுது முதலில் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் 18-30 வயதுடை இளைஞர்கள்தாம் இத்தகைய போராட்டங்களின் முக்கியசக்தி என்பதாகும். அவர்களில் ஆண்கள், பெண்கள்,ஷியா, சுன்னி, முதலாளி, தொழிலாளி, டாக்டர்கள், எஞ்சினீயர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அடங்குவர்.

ஏதேனும் கட்சிகளோ, இயக்கங்களோ, மத அமைப்புகளோ, தலைவர்களோ இவர்களை வழி நடத்திச் செல்லவில்லை. இத்தகையதொரு எதிர்பாராத உயிர்தெழல் கண்முன்பாக நிதர்சனமான பொழுது சுதந்திரத்திற்காகவும், நீதிக்காகவும், பல ஆண்டுகளாக போராடிய கட்சிகளும் அமைப்புகளுமெல்லாம் மக்கள் எழுச்சிப்பிரவாகத்தில் பங்காளிகளானார்கள்.

கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியிலிருந்து ஆட்சியை பாதுகாக்க தள்ளாடும் வயதிலும் தந்திரங்களை பயின்றும் அவை பலனற்றுப் போனதால் தடுமாறி வீழ்ந்தனர் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்.

துனீஷியாவின் பின் அலியும், எகிப்தின் ஹுஸ்னி முபாரக்கும் மரணத்திற்கு போராடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடக்குமுறைக்கும், அகங்காரத்திற்கும் பெயர் பெற்ற லிபியாவின் முஅம்மர் கத்தாஃபியும் இதர அரபுலக ஆட்சியாளர்களும் மக்கள் எழுச்சியை இரத்தக் களரியால் இனி எவ்வளவு காலம் அடக்கி ஒடுக்கிவிட முடியும்? என்னவாயினும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு அரசு கருவூலத்தையும் நாட்டையும் குடும்ப சொத்தாக்கிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இனியும் அதிக நாட்கள் பதவியில் தொடரமுடியாது என்பது உறுதியாகும்.

இவர்களை வைத்து சித்து விளையாட்டுக்களை ஆடிய அமெரிக்கா உள்ளிட்ட மேலாதிக்க சக்திகளும், சியோனிஸ்டுகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மனித குல வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அபூர்வமான இந்த புரட்சியின் முழு சொந்தக்காரர்களும் இளைஞர்கள்தாம் என்பது உலகம் அறிந்துக்கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் அளித்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான கொடூரமான அடக்குமுறையை தாண்டி புரட்சிக்கு அழைப்பு விடுத்த இளைஞர்கள், எத்தகைய அரசியல் நெருக்கடிகளையும், அடக்குமுறைகளையும் தங்களது மன உறுதியின் மூலம் வெல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

பாரம்பரிய அச்சு ஊடகங்களும், சேனல்களும் சுய ஆதாயங்களுக்காக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த வேளையில் அராஜகங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல் எழுப்பவும், சுதந்திரத்திற்காக போராடவும் வேறு வழிகளை தேர்ந்தெடுக்க அனுபவம் அவர்களுக்கு கை கொடுத்தது.

ஜனநாயகத்தின் உயிரற்ற சடலங்களாக மாறிவிட்ட நாடுகளில் வாக்குச்சீட்டிற்கு கிழிந்த காகிதத்தின் மதிப்புக்கூட இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அழுகிற குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்து அவர்களது அழுகையை அடக்குவதுபோல பந்தையும், கோர்ட்டையும், க்ளப்பையும், பணத்தையும் அளித்து கால்பந்து ஜுரத்தை வளர்த்து இளைய தலைமுறையினரின் ஆவேச உணர்வுகளை வீரியமற்றதாக மாற்றிவிடலாம் என்பது ஏகாதிபத்தியவாதிகளின் தந்திரமாகும்.

சிந்தனையை முடக்கி ஒழுக்கச் சீரழிவுகளையும், பாலியல் வக்கிரங்களையும் உருவாக்கும் சினிமா, தொலைக்காட்சி தொடர்கள், மதுபானம், சூதாட்டம் ஆகியவற்றின் வாசல்களை திறந்துவிட்டு எழுதிக்கொடுத்ததை வாசிக்கும் மார்க்க அறிஞர்களை கைப்பாவையாக்கிய ஆட்சியாளர்களுக்கு இறைவனைப் பற்றிய பயம் என்பது அறவே இல்லாமல் போனது.

என்றைக்காவது ஒருநாள் இளைய சமூகம் மாத்தி யோசிக்கவேக் கூடாது என்ற பிடிவாதத்தில் இத்தகைய அநாகரீகங்களை புரிந்து வந்தார்கள் அவர்கள்.

ஆனால், எல்லா கனவுகளும், திட்டங்களையும் தகர்த்து எறிந்த அரபுலக இளைஞர்கள் தங்கள் கைகளில் கட்டப்பட்டிருந்த விலங்குகளையெல்லாம் அறுத்தெறிந்துவிட்டு ஏகாத்தியபாதிகளுக்கெதிராக வீதிகளில் அணி திரண்டுள்ளனர்.

இளைய சமூகத்தின் எதிர்பாராத எழுச்சிப் பேரலையின் முன்னால் இறைவனின் மற்றும் மக்களின் எதிரிகளான சர்வாதிகாரிகள் மண்டியிடுவதோடு முகங்குப்புற நிலம் கவ்வுவதை உலகம் கண்டுகொண்டுதானிருக்கிறது.

நிச்சயமாக இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு இந்த நிகழ்வுகளிலிருந்து படிப்பினைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் நமது நாடும் ஒன்று. இங்கே மாற்றத்தின் வாசல்கள் திறந்து கிடப்பதால் மக்கள் எழுச்சிக்கெல்லாம் சாத்தியமே இல்லை என சிலர் ஆறுதலடையலாம். ஆனால், நமது ஜனநாயகம் பணத்திமிரும் மதவெறியும் பிடித்த குற்றவாளிகளின் கரங்களில் சிக்கி சின்னாப் பின்னமாகிக் கொண்டிருக்கிறது. ஊழல் மற்றும் மோசடியின் கொடூரமான கரம் இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நாம் ஆறுதலடைவதற்கு என்னக் காரணம் இருக்கிறது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

கிரிக்கெட்டின் ஜுரத்திலும், சினிமாவின் மோகத்திலும் இளைஞர்களை மூழ்கடித்துவிட்டு தாங்கள் சுகபோகமாக ஆட்சிச் செய்யலாம் என இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் கனவுகளை கண்டுக் கொண்டிருக்கின்றன. கோடிகளை கொள்ளையடித்துவிட்டு சில இலவசங்களை அளித்து நாட்டு மக்களை திருப்திபடுத்தினால் போதும் என்ற சிந்தனை அரசியல் கட்சிகளை ஆட்கொண்டுள்ளது.

மதவெறியையும், ஜாதீய வெறியையும் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றனர் தேசபக்த வேடம்போடும் சில போலிகள்.

இந்தியாவில் மிகப்பெரிய நிர்ணாயக சக்தி இளைஞர்களாவர். அவர்களை அரசியலிருந்து ஒதுக்கி நிறுத்திவிட்டு உணர்வற்ற சடலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றாலும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் எழுச்சிப் போராட்டங்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கருதுவது மூடத்தனமாகும்.

பண்டாரங்களும், பரதேசிகளும், கூத்தாடிகளுமெல்லாம் தலைவராக தலை நிமிர்த்தி நடந்துகொண்டு 'எனக்கு பின்னால் லட்சக்கணக்கானோர் அணி திரண்டுள்ளனர்' என வீம்பு பேசுவது இனி அதிக நாள் நீடிக்காது. வயோதிகர்களால் வழிநடத்தப்படும் கட்சிகளில் இளைஞர்கள் பலிகடாவாக்கப்படுவது வெகு நாட்கள் தொடராது. புரட்சி என்பது பேலட் பேப்பரிலோ அல்லது புல்லட்டிலோ அல்ல. இளைஞர்களின் எழுச்சியின் மூலமாகத்தான் என்ற புதிய பாடத்தை அனைவரும் படித்தேயாக வேண்டும். இளைய தலைமுறை தம்மை சுற்றியிருக்கும் மாயையைகளை விலக்கி விட்டு எழுச்சிப்பெற்றால் டெல்லி ஜந்தர்மந்தர் தஹ்ரீர் சதுக்கமாக மாற வெகு காலம் வேண்டிவராது.
-பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...