Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 13, 2010

மருந்துக் கடைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்!

'வருமுன் காப்போம்' என்பது அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக ஆளும் வர்க்கத்திற்கோ 'வந்தபின் பாப்போம்' என்பதுதான் கொள்கையோ என என்னும் வகையில் பெருகிவரும் போலிகள் பற்றிய செய்திகள் அமைந்துள்ளன. அரசு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டுமாயின், மக்களில் சிலரின் உயிரோ,பணமோ,மானமோ பறிபோகவேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.ஒருகாலத்தில் புற்றீசல் போல் கிளம்பிய போலி நிதி நிறுவனங்கள் பகிரங்கமாக அலுவலகம் அமைத்து, ஊடகங்கள் வாயிலாக விளம்பரங்கள் செய்து அதன் மூலம் மக்களின் பணத்தை வசூலித்து ஏப்பம் விடும்வரை கண்டுகொள்ளாத அரசு, ஏமாந்த மக்களின் போராட்டத்திற்கு பின் தான் சில நடவடிக்கைகள் மேற்கொண்டது.அதுபோல திடீர் திடீர் என அவதாரமெடுக்கும் போலிச் சாமியார்கள் ஆசிரமம் அமைத்து அருள்வாக்கு[!] சொல்கிறோம் என்ற பெயரில், சொத்துக்களை குவிப்பதோடு கொலை-விபச்சாரம் போன்றவற்றிலும் ஈடுபடுவதை ஊடகங்கள் படம்பிடித்து காட்டியபின்தான் போலிச் சாமியார் விஷயத்தில் சட்டம் கண்விழிக்கிறது.கும்பகோணம் தனியார் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பிஞ்சுகள் கருகிய பின்தான் தனியார் பள்ளிகள் விஷயத்தில் அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பட்டாசு தொழிற்சாலை தீவிபத்தில் பலர் பலியானபின்தான் பல போலி பட்டாசு தொழிற்சாலைகள் சீல்வைக்கப்பட்டன. இதுபோக, போலி டாக்டர்கள் கைது, போலி வருமானவரி அதிகாரி கைது, போலி போலீஸ் கைது என்று எங்கும் போலி எதிலும் போலி என்ற பட்டியலில் இப்போது போலி மற்றும் காலாவதி மருந்து விஷயம் ரெக்கை கட்டி பறக்கிறது. தோண்ட தோண்ட கிளம்பும் புதையல் போல பெட்டி பெட்டியாக மருந்துகள் கைப்பற்ற படுகின்றன.இந்த காலாவதியான போலி மருந்துகள் மக்களை சென்றடைந்து இருந்தால் மக்களின் நிலை என்ன? நினைக்கவே மனம் பதறுகிறது.'ஆபரேஷன் சக்சஸ்;ஃ பேசன்ட்காலி' என்று தமாசாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் எத்துனை நோயாளிகள் இந்த காலாவதியான நோயினால் காலமானார்களோ, எத்துனை பேரை இந்த காலாவதியான மருந்துகள் நிரந்தர நோயாளியாக்கியதோ கடவுளுக்கே வெளிச்சம். உயிர் காக்கும் மருந்து விஷயத்தில் கைவரிசை கட்டிய கயவர்களை அரபு நாடுகளை போல் பொது இடத்தில் வைத்து மரணதண்டனை விதிக்கவேண்டும். அப்போதுதான் மருந்து-உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் திருந்துவார்கள். மேலும் உயிர் காக்கும் மருந்துகள் பாதுகாக்கப்பட்டதாக மக்களை சென்றடைய அரசே மருந்துக்கடைகளை ஏற்று நடத்த முன்வரவேண்டும்.இது சாத்தியமா என்ற கேள்வி வருமாயின், மனிதனின் உயிரை மெல்லக்கொல்லும் மதுக்கடைகளை அரசு வெற்றிகரமாக நடத்தும்போது, மனிதனின் உயிர் காக்கும் மருந்துக் கடைகளை ஏற்று நடத்துவதில் சிரமம் ஏதும் இருக்காது. இது ஒன்றே போலியான காலாவதியான மருந்துகளின் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற இருக்கும் ஒரே வழியாகும். அரசு கவனத்தில் கொள்ளுமா..?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...