Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 31, 2013

ஆப்கானிஸ்தான் போர் வெற்றி, தோல்வியின்றி முடிவு - ஆஸ்திரேலிய பிரதமர் ஒப்புதல்!

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் சென்றார். உருஸ்கான் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமிற்குச் சென்ற அவர், அங்குள்ள ஆஸ்திரேலிய வீரர்களிடம் உரையாற்றினார். நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது, இதில் நமக்கு வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை என்று டோனி அபோட் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், அல் காய்தா இயக்கத்தினரை எதிர்த்துப் போரிடும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் ஆஸ்திரேலிய படையினரும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்கியிருக்கும் ராணுவ முகாம், உருஸ்கான் மாகாணம், தாரின் கோட் பகுதியில் உள்ளது. அங்கு திங்கள்கிழமை வந்த டோனி அபோட்டை, ஆப்கான் உள்துறை அமைச்சர் முகமது ஒமர் தௌத்ஸாய் வரவேற்றார். வரும் 2014-ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என அறிவிக்க ப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தனது நாட்டு ராணு வீரர்களிடையே பிரதமர் டோனி அபோட் பேசியதாவது: “ஆஸ்திரேலியாவின் மிக நீண்ட போர் முடிவுக்கு வருகிறது. இதில் நமக்கு வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. ஆனால், இங்கு நாம் ஆற்றியுள்ள பணிகள் காரணமாக ஆப்கானிஸ்தானின் நிலை மேம்பட்டுள்ளது என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஆப்கன் போர் மிகவும் சிக்கலாக இருந்தது. ஆஸ்திரேலிய படையினரை வாபஸ் பெறும் முடிவு
கசப்பானதாகவும், அதே சமயம் இனிப்பானதாகவும் இருக்கிறது. நூற்றுக்கணக்கான வீரர்கள் கிறிஸ்துமஸ் விழாவை தங்களின் வீ்ட்டில் கொண்டாடுவார்கள் என்பது இனிப்பான செய்தி. ஆனால், அனைவரும் திரும்பப்போவதில்லை என்பது கசப்பான விஷயம். (20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஆப்கன் போரில் பங்கேற்றனர். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். 260 பேர் படுகாயமடைந்தனர்.)

ஆப்கனில் நமது வீரர்கள் செயற்கரிய செயல்களை சாதித்துக் காட்டினர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இவ்வளவு பணிகளுக்குப் பின்பும், ஆப்கானிஸ்தான் தொடர்ந்து அபாயகரமான பகுதியாகவே இருப்பது கவலையளிக்கிறது” என்றார். ஆப்கனில் நடைபெற்று வந்த போர் நடவடிக்கைகள் அனைத்தையும் ஆஸ்திரேலியா நிறுத்திவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் உருஸ்கான் மாகாண முகாமிலிருந்து ஆயிரம் வீரர்கள் ஆஸ்திரேலியா திரும்ப உள்ளனர். எஞ்சியுள்ள 400 ஆஸ்திரேலிய வீரர்கள், ஆப்கன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

நன்றி:தி இந்து 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...