Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 13, 2011

இதுவரை இல்லாத அளவு விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: ஆர்வமாக திரண்டு வந்தனர் மக்கள்


சென்னை:தமிழகத்தின் அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கவுள்ள சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. மாநிலம் முழுவதும் ஆர்வத்துடன் திரண்டு வந்து பொதுமக்கள் ஓட்டளித்தனர். பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் இன்றி, அமைதியாக தேர்தல் நடந்ததால், முதன் முறையாக ஓட்டுப்பதிவு 80 சதவீதமாக உயர்ந்தது.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. பெரும்பாலான தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நேரத்திற்கு முன்பாகவே, வாக்காளர்கள் வந்து வரிசையில் காத்திருந்ததால், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. சில ஓட்டுப்பதிவு மையங்களில் ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுது காரணமாக தாமதம் ஏற்பட்டது.சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் வேகமாக அதிகரித்த வண்ணம் இருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.தேர்தல் கமிஷன் மூலம், புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இது தவிர, கட்சிகள் சார்பிலும் பூத் சிலிப் வழங்கப்பட்டிருந்ததால், வாக்காளர்கள் இதை எடுத்து வந்து எளிதாக ஓட்டுப்பதிவு செய்தனர்.சென்னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஸ்டாலின், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட, அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டளித்தனர். தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக ம.தி.மு.க., அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ஓட்டளித்தார். மாநில காவல்துறையோடு இணைந்து, துணை ராணுவப்படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் என, ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பதட்டமான தொகுதிகள் என, அடையாளம் காட்டப்பட்டு இருந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் கள்ள ஓட்டு போடுவதாக வந்த புகாரையடுத்து, துணை ராணுவப்படையினர் அங்கு குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சேலத்தில் போலீசார் தாக்கியதில் அ.தி.மு.க., தொண்டர் இறந்ததாக புகார் எழுந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால், அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ஓட்டுப்பதிவின் போது குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்தது.ஓட்டுப்பதிவை, கண்காணிப்பு கேமராக்கள் மூலம், தேர்தல் அதிகாரிகள் கண்காணித்த வண்ணம் இருந்தனர். இதனால், ஓட்டுச்சாவடிகளில் தேவையற்ற குழப்பங்களுக்கு இடம் தராத வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களின் செயல்பாடு அமைந்திருந்தது.
தமிழக டி.ஜி.பி., போலோநாத் கூறும்போது, "தமிழகம் முழுவதும் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. பெரிய அளவிலான புகார்கள் ஏதும் வரவில்லை. ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க பொதுமக்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு அளித்தனர்' என்றார்.
மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்த நிலையிலும், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவ்வாறு காத்திருந்தவர்களுக்கு, "டோக்கன்' வழங்கப்பட்டு, ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், "சீல்' வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.வன்முறை, மோதல்கள், ஓட்டுச்சாவடி கைப்பற்றல் போன்ற பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடந்ததால், ஓட்டுப்பதிவு 75 முதல் 80 சதவீதமாக உயர்ந்தது என, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
ஓட்டுப்பதிவு துவங்கிய நேரம் முதல், மாலை வரை பொதுமக்கள் ஆர்வத்தோடு ஓட்டுச்சாவடிக்கு அலை அலையாய் வந்து ஓட்டளித்துள்ளது அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் யாருக்கு ஆதரவாக அலை வீசுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல், அரசியல் கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...