Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 03, 2011

சாதித்தது இந்தியா!!

மும்பை, ஏப். 2: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.

1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.

சொந்த மண்ணில் முதல்முறை...
இந்த முறை கோப்பையை வென்றதன் மூலம் கோப்பையை நடத்திய நாடுகள் அதன் சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி புதிய சாதனைப் படைத்துள்ளது இந்திய அணி. இதற்கு முன் 1996-ம் ஆண்டு போட்டியை நடத்திய இலங்கை வென்றிருந்தாலும், இறுதி ஆட்டம் பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சச்சின் கனவு நனவானது
6-வது உலகக் கோப்பையில் விளையாடிய சச்சின், மும்பையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் நீண்ட நாள் கோப்பைக் கனவு நனவாகியுள்ளது.

சாதனை கேப்டன் தோனி
ஒருநாள் கிரிக்கெட், இருபது ஓவர் கிரிக்கெட் என இரண்டிலும் கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் தோனி. டெஸ்ட் அரங்கிலும் அவரது தலைமையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணி கோப்பையை வென்றதும் மைதானத்தில் சச்சினை தோளில் தூக்கி வைத்து வலம் வந்தார் யூசுப் பதான். இந்திய வீரர்கள் யுவராஜ், ஹர்பஜன் சிங் ஆகியோரின் கண்களில் கண்ணீர்ப் பெருக்கெடுத்தது உணர்ச்சிபூர்வமாக இருந்தது.



நாடு முழுவதும் கொண்டாட்டம்
இந்திய அணியின் வெற்றி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் பட்டாசுகளை வெடித்தும், பலூன்களை பறக்கவிட்டும், கலர் பொடிகளை தூவியும் வெற்றியைக் கொண்டாடினர். கார்களில் தேசியக் கொடியை ஏந்தியும் வலம் வந்தனர்.
பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், உரக்கக் குரல் எழுப்பியும் கொண்டாடினர். 1983-ல் இந்தியா கோப்பையை வென்றபோது ஏற்பட்ட அதே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இந்தியா முழுவதும் காண முடிந்தது.
பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாடல்களை பாடியும், சாலைகளில் நடனமாடியும் ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தியது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

விழாக்கோலம் பூண்டது சென்னை
உலகக் கோப்பை வெற்றியால் சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டது.

சென்னையின் பல்வேறு சாலைகளும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சாலைகளில் வந்த வாகனங்களை எல்லாம் மறித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். இளைஞர்கள் வாகனங்களில் படையெடுத்ததால் புத்தாண்டு கொண்டாட்டம் போன்று காட்சியளித்தது.
எல்லா வீடுகளிலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர். மெரீனா சாலையில் வாகனங்களில் வந்து குவிந்த இளைஞர்களால் அந்தப் பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸôர் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.
source:Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...