சிதம்பரம், ஏப். 18: மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டது. இந்த விடுமுறையை பயனுள்ளதாக்க கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடலோரத்தில் பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியில் உள்ள எழில்மிகு மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகளை படகில் சுற்றிப் பார்த்து மகிழலாம்.
சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.
இந்த மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகள், கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். ஆண்டுதோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும்.
மேலும் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.
2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலையின்போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பலர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் சூட்டப்பட்டது.
இங்குள்ள சுரபுன்னை செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மைய சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந் நிறுவனத்தினர் தெரிவித்தனர். பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் தொலைபேசி எண்: 04144-24923 சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக தொலைபேசி எண்: 04144-238739 கிள்ளை பேரூராட்சி தொலைபேசி எண்: 04144-24227. வெப்சைட் முகவரி: www.killai.com.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...