Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 04, 2011

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மக்கள் ஆதரவு யாருக்கு

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அமைச்சரின் பலத்தை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை மக்கள் ஆதரிக்கப்போகிறார்களா அல்லது உள்ளூர் வேட்பாளர் முருகுமாறனை ஆதரிக்க போகிறார்களா என்ற நிலையில் தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தின் கடைகோடி தொகுதியாக காட்டுமன்னார்கோவில் உள்ளது. விவசாய தொழிலையே நம்பியுள்ள இங்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பொருளாதார அளவில் கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் காணாத தொகுதியாக உள்ளது.

தனி தொகுதியான இங்கு கடந்த 62ம் ஆண்டு முதல் 11 சட்டசபை தேர்தலில் 6 முறை தி.மு.க. வும், 2 முறை காங்., கட்சியும், அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை தலா ஒருமுறை கைப்பற்றின. கடந்த 2006 தேர்தலில் காங்., வேட்பாளர் வள்ளல்பெருமானுக்கும் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாருக்கும் ஏற்பட்ட போட்டியில் ரவிக்குமார் வெற்றி பெற்றார். படித்தவர், எழுத்தாளர், வங்கி ஊழியரான இவர் சிறப்பாக மக்கள் பணியாற்றுவார் என்று அறிமுகப்படுத்தப்பட்டதால், வெளியூர் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை என ரவிக்குமாரை அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவரது பணிகள் திருப்தியாக இல்லை என தொகுதி மக்கள் குறைபட்டு கொள்கின்றனர்.

கடலூர் - நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் முட்டம் பாலம், 108 கோடியில் கொள்ளிடம் அணைக்கரை பலப்படுத்தி சாலை போடும் பணி, வீராணம் ஏரியை தூர் வாருவது, வாரியங்கள் அமைத்தது, தமிழகத்தில் வீடு கட்டும் திட்டத்திற்கு தனது கோரிக்கையே காரணம் என நல்ல திட்டங்கள் வர காரணமாய் இருந்திருக்கிறேன் என அவர் கூறினாலும், கடும் வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படும்போது கூட எம்.எல்.ஏ., வரவில்லை என்பது தொகுதி மக்களின் பெரும் குறையாக இருந்து வருகிறது.அதே போன்று அவரது அலுவலகம் ஐந்தாண்டுகளில் திறந்திருந்த நாட்கள் மிகவும் குறைவு. இதனால் அவர் மீது தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே மீண்டும் இதே தொகுதியில் ரவிக்குமார் வி.சி., சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். மாவட்ட அமைச்சர் பன்னீர்செல்வத்தை மட்டுமே நம்பி இந்த முறை களமிறங்கியுள்ளார். கடந்த எம்.பி., தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் தொகுதியில் அனைத்து தொகுதிகளைக் காட்டிலும் கூடுதல் ஓட்டுகள் திருமாவளவனுக்கு கிடைத்ததால் கட்சிக்கு தொகுதியில் செல்வாக்கு கூடியுள்ளது என்ற கணக்கு ஒரு புறம். அமைச்சர் சொந்த ஊராக இருப்பதால் கண்டிப்பாக வெற்றி பெற வைத்துவிடுவார் என்ற நம்பிக்கை மீண்டும் இதே தொகுதியல் தைரியமாக ரவிக்குமார் நின்றுள்ளார். ரவிக்குமார் நிறுத்தப்படுவதை விரும்பாதவர்கள் உள்ளூர் வேட்பாளரை நிறுத்த வேண்டும் வலியுறுத்தினர். அவருக்கு எதிராக மணிரத்தினம் என்பவரை பொது வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே ரவிக்குமாரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த முருகுமாறன் நிறுத்தப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக அ.தி.மு.க., வில் பல்வேறு பொறுப்புகளை வகித்து கட்சி பணியாற்றும் இவருக்கு ஒரே பலம் சொந்த ஊர்க்காரர் என்பது மட்டுமே. தமிழ் ஆர்வலரான இவர் நடுநிலையாளர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் உள்ளிட்ட தொகுதி மக்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளார். எனவே தேர்தலில் அமைச்சரின் பலத்தை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை மக்கள் ஆதரிக்கப்போகிறார்களா அல்லது உள்ளூர் வேட்பாளர் முருகுமாறனை ஆதரிக்க போகிறார்களா என்ற நிலையில் இரு வேட்பாளர்களும் மக்களிடம் ஆதரவு திரட்டி வருவதால் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...