Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 12, 2011

234 தொகுதிகளிலும் இன்று ஒரே நாளில் ஓட்டுப்பதிவு : அடுத்தது கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா?


சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டசபை தேர்தல்களுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். மே 13ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால், அடுத்து கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா என்பது, மே 13ம் தேதி தான் தெரியும்.

தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு ஏப்ரல் 13ம் தேதி (இன்று) ஓட்டுப்பதிவு நடைபெறும் என, மார்ச் 1ம் தேதி, தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான மனு தாக்கல், மார்ச் 19ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடந்தது. மார்ச் 30ம் தேதி வரை, வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டதால், அதன்பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.தற்போதைய நிலையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மொத்தம் 2,748 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687. இவர்களுக்காக, மொத்தம் 54 ஆயிரத்து 314 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஓட்டுப் போட 62 ஆயிரத்து 461 கட்டுப்பாட்டு கருவிகளும், 66 ஆயிரத்து 799 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் பணியில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 749 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசில் பணியாற்றும் 12 ஆயிரத்து 918 பேர் மைக்ரோ பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில், மத்திய துணை ராணுவப் படையினர் 240 கம்பெனிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, தமிழக போலீசார், ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர் என ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இரண்டு பெரிய அணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க., தலைமையிலான அணியில், தொண்டர்கள் மட்டத்தில் நல்ல ஒத்துழைப்பு காணப்படுகிறது. அதே நேரத்தில், தி.மு.க., அணியில் காங்கிரஸ் மீது தி.மு.க.,வினருக்கு அதிருப்தி, காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல், காங்கிரசுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே உள்ள பிரச்னைகள் போன்றவை சவாலாக உள்ளன.

பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்ற நிலையில் 119 தொகுதிகளில் தான் தி.மு.க., போட்டியிடுகிறது. அதேநேரத்தில், அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இரு அணிகளுமே பிரசாரத்தில் முழு பலத்தை காண்பித்துள்ளன. இரு தரப்புக்கும் சம அளவில் வாய்ப்புகள் உள்ளதால், அடுத்து கூட்டணி ஆட்சி அமையுமா? தனிக் கட்சி ஆட்சியா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

மே மாதம் 13ம் தேதி தான் ஓட்டு எண்ணிக்கை என்பதால், அதுவரை முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை தேர்தலின் போது பணப் பட்டுவாடா அதிகம் இருக்கும் என தேர்தல் கமிஷன் கருதியது. அதன் காரணமாக, மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் சோதனைகள் நடந்தன. இதன் காரணமாக, நேற்று முன்தினம் இரவு வரை, 33 கோடியே 44 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது.

விதிமீறல்கள் நடந்ததாக, தமிழகம் முழுவதும் 61 ஆயிரத்து 982 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு நடந்தும், பல இடங்களில் பணப் பட்டுவாடாவும் நடந்துள்ளது. குறிப்பாக, குடிசைப் பகுதி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள் போன்றவற்றில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.இன்று நடக்கவுள்ள ஓட்டுப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள், நேற்றே அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஓட்டுச்சாவடிகள் நேற்று தெரிவிக்கப்பட்டு, அவர்களும் நேற்று மாலையே ஓட்டுச்சாவடிகளுக்கு வந்துவிட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...