Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 08, 2011

தொகுதி ஒதுக்குவதில் தலைவலியை தரும் "கடலூர் மாவட்டம்'

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் கடந்த தேர்தலில் தி.மு.க., மூன்று தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பா.ம.க., ஒரு தொகுதியிலும், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி தலா இரண்டு தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

கடந்தமுறை தி.மு.க., அணியில் இருந்த கம்யூ., கட்சிகள் அ.தி.மு.க.,வுடனும், அங்கிருந்த வி.சி., தி.மு.க., அணிக்கு மாறியுள்ளன. மேலும், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., அ.தி.மு.க., அணியில் சேர்ந்துள்ளது.மாவட்டத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., சமபலத்தில் உள்ள நிலையில், கணிசமான ஓட்டு வங்கியை வைத்துள்ள பா.ம.க., மற்றும் வி.சி., கட்சியும் இணைந்துள்ளதால் தி.மு.க.,விற்கும், தே.மு.தி.க., வரவால் அ.தி.மு.க.,விற்கும் கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தில் இரு அணியும் சமபலத்தில் உள்ளதால் கட்சி தலைமையிடம் தொகுதியை பெற்று விட்டால், கூட்டணி பலத்தில் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என ஒவ்வொரு கட்சியினரும் கருதுகின்றனர். இதனால் இரு அணிகளிலும் தொகுதியைப் பெற கடும் போட்டி நிலவுகிறது.தி.மு.க., அணியில் இடம் பெற்றுள்ள வி.சி., கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய திட்டக்குடி (தனி), காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு பொது தொகுதியை கூட்டணி தலைமையில் பெற்றிட முயன்று வருகிறது.

அதேகூட்டணியில் உள்ள பா.ம.க.,வோ தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள புவனகிரி, நெய்வேலி மற்றும் விருத்தாசலம் தொகுதிகளுக்கு குறி வைக்கிறது. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளோடு கூடுதலாக விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகிறது.அதேப்போன்று அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க., கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி நிர்வாகிகள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியோடு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்காக கடலூர், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை பெற்றிட முயற்சித்து வருகிறது.மற்றொரு கட்சியான ம.தி.மு.க., கடலூர், நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகள் மீதும், மா.கம்யூ., கட்சியோ கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த சிதம்பரம் அல்லது தங்களுக்கு செல்வாக்கு உள்ள மறுசீரமைப்பில் நீக்கப்பட்டுள்ள நெல்லிக்குப்பம் தொகுதியை உள்ளடக்கிய பண்ருட்டி தொகுதி மீது கண் வைத்துள்ளது.

இப்படி இரு அணியிலும் இடம் பெற்றுள்ள கட்சி நிர்வாகிகள், தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பெற்றிட போட்டா போட்டி போட்டு வருவதால், யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்கீடு செய்வது எனப் புரியாமல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் தலைவலிக்கு ஆளாகி வருகின்றனர்.
-DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...