ஜுலை.24:எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-"6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அருகில் உள்ள பள்ளியில் இலவசமாக படிப்பதற்கு உரிமை உள்ளது.இந்த சட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட (ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது, படிக்கும் பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது,தொடக்கக் கல்வியில் சேராத குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கு தேர்வு வைக்கக்கூடாது.எந்த மாணவரையும் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ காயப்படுத்தக் கூடாது. எவ்வித தேர்வும் வைக்காமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என பல்வேறு பரிந்துரைகள் ஆலோசனை குழுவால் அளிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது".இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...