Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 30, 2010

பிகாரில் முஸ்லிமுக்கு துணை முதல்வர் பதவி: பாஸ்வான்


பாட்னா: பிகாரில் வரும் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியை முஸ்லிமுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான பாஸ்வான், தனது சகோதரர் பசுபதி குமாரை துணை முதல்வர் பதவியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக பிகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் -பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் புகார் கூறி வருகின்றன.

இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய பாஸ்வான், எங்கள் கூட்டணி வென்றால் முஸ்லிம் ஒருவரை துணை முதல்வராக்குவது குறித்துப் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம்.

பிகாரில் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினரும் முன்னேற்றம் பெற எங்கள் கூட்டணி பாடுபட்டு வருகிறது என்றார்.

பிகாரில் ஆட்சியைப் பிடிக்க முஸ்லீம்களின் ஆதரவு மிக மிக அவசியம் என்பதால் அவர்களது வாக்குகளைப் பெற ஐக்கிய ஜனதா தளதத்தின் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார், லாலு, பாஸ்வான், காங்கிரஸ் கட்சி ஆகியோர் பலவித சலுகைகளை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் ஒரு பகுதியாக பிகாரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்களில் ஒருவரான வருண் காந்தி ஆகியோர் வரக் கூடாது என்று தனது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு நிதிஷ் குமார் நிபந்தனையும் போட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.

எங்கள் கூட்டணிக்கு பெரும் ஆதரவு-லாலு:

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய லாலு, பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கூட்டணிக்கு ஆதரவு பெருகியுள்ளதால் வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம்.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலுக்குப் பிறகு நிதிஷ் குமார் முதல்வராக இருக்கமாட்டார். எங்கள் கூட்டணியில் யார் முதல்வராவார் என்பதைவிட நிதிஷை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதைதான் மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...