Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 28, 2010

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மாறுவேடத்தில் இயக்குநர் ஆய்வு:

சிதம்பரம்:
சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையை ஊரக மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் மாறுவேடத்தில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து முதன்மை மருத்துவ அதிகாரி கே.நடராஜன் மற்றும் முதன்மை செவிலியர் டி.பேபி ஆகிய இருவரையும் உடனடியாக ராமநாதபுரம் மற்றும் பல்லடம் ஆகிய ஊர்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.


தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையை வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்ட போது சுகாதார சீர்கேடாக உள்ளதாகவும், சரியான பராமரிப்பு இல்லாததால் உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதனடிப்படையில் ஊரக மருத்துவத்துறை இயக்குநர் (டி.எம்.எஸ்.) டாக்டர் புருஷோத்தம் விஜயகுமார், கடலூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் போன்று மாறுவேடத்தில் சென்று சோதனை மேற்கொண்டனர்.


அப்போது தலைமை மருத்துவர் டாக்டர் கே.நடராஜன் மற்றும் தலைமை செவிலியர் டி.பேபி ஆகியோரின் செயல்பாடுகள் சரியில்லாததை அறிந்து இருவரையும் முறையே ராமநாதபுரத்துக்கும், கோவை பல்லடத்துக்கும் உடனடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். அதற்கு பதிலாக காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த டாக்டர் சங்கரலிங்கத்தை தலைமை மருத்துவராகவும் (பொறுப்பு), கடலூரைச் சேர்ந்த ரூபிஜோபிதத்தை தலைமை செவிலியராகவும் உடனடியாக நியமித்து இயக்குநர் புருஷோத்தம் விஜயகுமார் உத்தரவிட்டார்.


பின்னர் ஊரக மருத்துவத்துறை இயக்குநர் புருஷோத்தம் விஜயகுமார் தெரிவித்தது:


அமைச்சரின் உத்தரவின்பேரில் மருத்துவமனையை எனது தலைமையிலான குழு மாறுவேடத்தில் ஆய்வு செய்தது. அப்போது முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் முதன்மை செவிலியர் ஆகியோரின் திறமையற்ற செயல்பாடு குறித்து தெரியவந்து இருவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். சரியாக பணியாற்றாத செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லேப்-டெக்னீஷியன் மலர்கண்ணன் பணிக்கு காலதாமதமாக வந்ததால் அவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


மருத்துவமனையில் மொத்தம் உள்ள 22 மருத்துவர் பணியிடங்களில் 9 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் அப்பணியிடங்கள் நிரப்பப்படும். 3 மருத்துவர்கள் மருத்துவ விடுப்பில் உள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மீதம் உள்ள 10 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இம்மருத்துவமனைக்கு எலும்பு முறிவு டாக்டர் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சுற்றுச் சுவர், கட்டடங்களை பழுது நீக்கல், கழிப்பறை மற்றும் வடிகால் வசதி போன்ற பணிகலை பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் புருஷோத்தம் விஜயகுமார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...