Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 30, 2013

நாளைய சிந்தனை...!


எதிர்காலச் சிந்தனை எல்லா மனிதரிடத்தும் நிறைந்திருப்பதைப் பார்க்கிறோம். படித்தவனோ, பாமரனோ, பணக்காரனோ, ஏழையோ எல்லோருக்குள்ளும் ஓர் கனவு இருக்கிறது. அதை விரைந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்ற உந்துதலும் மனிதர்களிடத்தில் காண்கிறோம்...

ஆனால் இந்த எதிர்காலச் சிந்தனை என்பது இவ்வுலக பலாபலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது அதற்குண்டான தயாரிப்புகளிலேயே பலர் மோகம் கொண்டிருப்பதையும், மூழ்கியிருப்பதையும் பார்க்கிறோம். 

முழுவீச்சுடன் செயல்திட்டங்களை வகுப்பதில் பலர் கொண்டிருக்கும் ஆர்வம் இயற்கையான மனித உணர்வு களுக்கும்  உறவுகளுக்கும் கூட முக்கியத்துவம் கொடுக்காமலிருப்பதை சமயங்களில் நாம் காணலாம். இது நாளடைவில் நம்முள் இறைவன் வைத்திருக்கும் மனித மாண்புகளை குழிதோண்டிப் புதைத்துவிடுமோ என்ற அச்சம் நம்முள் எழாமலில்லை.

உலக வாழ்வில் எதிர்காலச் சிந்தனை கூடாது என்று நாம் சொல்லவில்லை. அதுவும் வேண்டும். அதனூடே யாராலும் அழிக்க முடியாத உண்மைகளாய் இருக்கும் மரணம்,மண்ணறை வாழ்வு,மறுமை பற்றிய அந்த எதிர்காலச் சிந்தனை நம்முள் எத்தனை தூரம் ஆழமாய் வேரூன்றி யுள்ளது.அதற்கான தயாரிப்பில் நாம் எந்தளவு முனைப்புடன் முன்னேற்பாடுகளைச் செய்துள்ளோம் என்பதை நம்முள் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அப்படி இந்த உலகில் வாழ்வதற்காக, தன்னையே தியாகம் செய்து,அதற்காக சிந்தித்து, அதனடிப்படையில் செயல்பட்டு வரும் மனித சமூகம்,தான் மரணித்தவுடன் தனக்கு ஏற்படப் போகும் வாழ்விற்காக என்ன சம்பாதித்து வைத்துள்ளோம் என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

கண்ணியத்திற்குரிய இறைவன் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் (அல்குர்ஆன் : 59:18)

தாம் எதற்காக படைக்கப்பட்டோம், எதற்காக நமக்கு வாழ்வும் மரணமும் ஏற்படுகிறது என்பதைப் பற்றி மறந்து விட்ட நிலையில், நம்மை படைத்த எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். 

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக தான் மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான் (அல்குர்ஆன்: 67:2)

இந்த உலகில் மனிதன், தன் தாயின் வயிற்றில் இருந்து பிறந்து, வளர்ந்து, திருமணம் புரிந்து வாழ்ந்து மரணிப்பது என்பது சம்பிரதாய வாழையடி வாழையாக வரக்கூடிய சுழற்சியாக அமைந்து விட்டது. 

ஆனால் இறைவன் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு மனிதன் எப்படி தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்கிறான், நன்மையான செயல்களை செய்கின்றான் என்பதை சோதித்துப் பார்க்கும் பரீட்சைத் தளமாக தான் ஆக்கியுள்ளான். அதாவது இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, அடிபணிந்து, அவன் வழியில் நல்ல செயல்கள் செய்கின்றோமா? என்பதை சோதித்துப் பார்க்கும் களம்தான் இவ்வுலக வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் நாளைய தினம் அதாவது மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திக்கும்போது, அவனின் கேள்விகளுக்கு என்ன பதில் தரப்போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். 

ஜின், மனித சமுதாயமே! உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா? (என்று இறைவன் கேட்பான்).எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. (ஏக இறைவனை) மறுத்தோராக இருந்தோம் எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்(அல்குர்ஆன்: 6:130)

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாhஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன்: 31:33)

ஏனெனில் ஏமாறுதல் என்பது மனிதர்களுக்குப் பல வகையிலும் நிகழக்கூடியது. மனம் மனிதனை ஏமாற்றும். வேண்டாத பல எண்ணங்களுக்கு இடங்கொடுத்து மனம் நம்மை ஏமாற்றும். உடல் இச்சைகளில் ஆர்வம் கொண்டு ஏமாற்றும். கூட இருக்கும் மனிதர்கள் ஏமாற்றுவார்கள். ஷைத்தான் ஊசலாட்டங்களை ஏற்படுத்தி ஏமாற்றுவான். உலக கவர்ச்சிகளும் இதனிடையே நம்மை சாய்க்கும். இவைகளில் ஏமாந்து இஸ்லாம் கூறும் ஆன்மீக வாழ்வுக்கு பாதகங்களை ஒருவர் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அல்லாஹ்வைத் தவிர வேறெந்த உதவியுமில்லாத ஒருநாளை எண்ணி மனிதசமூகம் தனது பாட்டையை பாதுகாப்போடு அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அதைத் தான் மேற்கூறிய ஆயத்தில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். 

இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒரு நாள் இறந்து விடுவார்கள். யாரும் நிரந்தரமாக இவ்வுலகில் வாழ்ந்தது கிடையாது. இனியும் வாழப்போவதுமில்லை. அதைத்தான் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 29:57)

இத்தகைய மரணம் நமக்கு ஏற்படும்போது, நமது உயிரை கைப்பற்றுவதற்காக படைக்கப்பட்ட மலக்கு கைப்பற்றுவார். அதைப்பற்றி அல்லாஹ் கூறும்போது:

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது, நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 6:61)

இப்படி உயிரை கைப்பற்றுவதற்காக வரும் மலக்கு எவ்வாறு நம்முடைய உயிரை கைப்பற்றுவார்கள் என்பதை பற்றி திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் தெளிவாக சொல்லி எச்சரிக்கைச் செய்கிறான். 

அதாவது அல்லாஹ்வின் கட்டளைக்கும், அவனது தூதருக்கும் மாற்றமாக தங்களின் வாழ்வை இவ்வுலகில் அமைத்துக் கொண்டவர்கள் தங்களின் மரணவேளையில் எப்படி அதை எதிர்நோக்குவார்கள் என்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியுள்ளார்கள்:

அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கி தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும் அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய 

தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள். (அல்குர்ஆன்: 6: 93)

மறுப்போரின் முகங்களிலும் முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களை கைப்பற்றும் போது, சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள் என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! (அல்குர்ஆன்: 8:50, 47:27)

மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: 

ஒருவரின் மரணத்தருவாயில், அந்த மனிதர் தீயச் செயல்களில் ஈடுபட்டவராக இருக்கும் நிலையில், அவரின் உயிரை, மலக்குகள் கைப்பற்றும்போது கடினமான விதத்தில், அதாவது  ஈரமான கம்பளிப் போர்வை முள் மரத்தில் மாட்டிக் கொண்டால் கிழிந்து கசங்கியவாறு எடுக்கப்படுகிறதோ அதேப்போல் இந்த மனிதரின் உயிர் கைப்பற்றப்படும். அதேபோல் நல்லவராக இருக்கும் நிலையில் ஒரு மனிதரின் உயிரை கைப்பற்ற வரும் வானவர்கள், தண்ணீர் நிரம்பிய தோல்பையில் இருந்து தண்ணீர் தடையின்றி வெளியேறுவதுபோல், அவரின் உயிரை இலகுவாக கைப்பற்றுவார்கள். பின்னர் அந்த கெட்ட ஆத்மா சிஜ்ஜினில் வைக்கப்படும். நல்ல ஆத்மா இல்லியினீல் வைக்கப்படும் (பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மது 17803)

மேலும் இவ்வுலகில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்ட நல்லோர்கள் தங்களின் மரணவேளையில், உயிரை கைப்பற்ற வரும் வானவர்கள் அவர்களிடம் எப்படி அணுகுவார்கள் என்பதை தன் திருமறையில்: 

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறுவார்கள். (அல் குர்ஆன்: 16:32)

இம்மை வாழ்க்கையிலிருந்து ஏக இறைவனைச் சந்திப்பதற்கு மரணம் தான் மனிதர்களுக்கு செல்லும் வழியாக உள்ளது. பிறவிப்பயனை பூர்த்தி செய்து கொள்வதற்கு மரணமே மனிதர்களுக்கு இறுதி எல்லைக் கோடாய் உள்ளது. அந்த எல்லைக் கோட்டை ஒருமுறை தாண்டியவர் திரும்ப வந்ததில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தபோதும் மந்தமான சிந்தனை வயப்பட்டு மனிதர்களில் சிலர் பார்த்துக் கொள்ளலாம் அப்போதைக்கு என்று இருக்கின்றனர். அவ்வாறில்லை! மறுபடியும் பூவுலக வாழ்வுக்கு வாய்ப்பில்லை என்பது மாத்திரமல்ல, கொடுக்கப்பட்டிருந்த காலத்தை வீணடித்தவர்கள் திரும்பவும் வெற்றி பெறுவர் என்பது வெற்று வாய்ஜாலமே என்பதைத் தான் திருமறை கூறுகிறது. 

எனவே அல்லாஹ் அருளியிருக்கும் இந்த பிறவி அருமையான அருட்கொடையாகும்.அதிலும் அல்லாஹ் வையும் அவனது ரஸூலையும் நம்பிய வாழ்வு என்பது பாக்கியமிக்கதாகும். ஒளிவீசும் வழிகாட்டுதல்கள் நிறைந்த இறைமார்க்கத்தைப் பின்பற்றுவதில் வீண் தர்க்கங் களுக்கும், தடுமாற்றங்களுக்கும் இடம் தந்தால் வாழ்வு பயனற்று போய் விடும். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். 

இவ்வாறு மரணம் வரும் வேளையில், மனிதர்கள் இறைவனிடம்,தன்னை திரும்பவும் உலகிற்கு திருப்பி அனுப்புமாறு கூறுவார்கள்.ஆனால் எல்லாம் முடிந்து விட்ட நிலையில் அப்படியொரு வாய்ப்பில்லை என்பதை பின்வரும் வசனங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது, என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் என்று கூறுவான். அவ்வாறில்லை. இது வாய் வார்த்தை தான். அவன் அதை கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்வரை

அவர்களுக்குப் பின்னால் ஒரு திரை இருக்கிறது. (அல் குர்ஆன்: 23: 99-100)

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் வழங்கியவற்றில் இருந்து செலவிடுங்கள். இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே! என்று அப்போது மனிதன் கூறுவான். எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். ( அல் குர்ஆன்: 63:10-11)

நாளை நமக்கு ஏற்படப்போகும் மரணத்தருவாயில் நாம் இவ்வாறு புலம்பாமல் இருக்க வேண்டும் என்றால் அல்லாஹ்வும்,நபி(ஸல்) அவர்களும்  கூறியதை செயல்படுத்த வேண்டும். நன்மையான காரியங்களை விரைந்து செய்வதில் ஆர்வமுள்ளவர்களாக வேண்டும். உதாரணத்திற்கு தர்மம் செய்வதில் கூட மனிதர்களுக்கு சரியான வழிமுறையை  நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளதை பாருங்கள். 

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தர்மத்தில் சிறந்தது எது? என்று கேட்டார். நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும், செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சிய நிலையில் செய்யப்படும் தர்மமே! சிறந்தததாகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள். இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள் என்று சொல்லும் வரை தர்மம் செய்வதை தள்ளிபோடாதே! அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும் என்று பதிலளித்தார்கள்.(அபுஹூரைரா(ரலி) புகாரி 2748)

எனவே மனித சமூகமே! நம்பிக்கைக் கொண்டு நற்காரியங்கள் செய்வது இறுதி வெற்றிக்கும் அமைதிக்கும் மிகச் சரியான வித்தாகும். அதை விதைத்துப் பயிரிடுவதற்கு இஸ்லாமே சரியான செயற்களனாகும். தர்மம் செய்வதற்கு பெரும் பொருள் இருக்க வேண்டுமென்பதில்லை. வறுமையை அஞ்சிய நிலையே போதும். மாத்திரமல்ல அப்போது செய்யும் தர்மமே சிறந்த தர்மமாக இஸ்லாம் கூறுகிறது. உயிர் தொண்டைக்குழியை அடையும் வரை காரியங்களை பிற்படுத்துவது நஷ்டங்களுக்கே வழி வகுக்கும். நன்மைகளை முற்படுத்துவதே நலம் பயக்கும். வல்ல நாயன் நம்மனைவரையும் நன்மைகளை முற்படுத்தும் நன்மக்களாக ஆக்கி அருள்வானாக! 

ஆகவே, எப்போது நமக்கு மரணம் வரும் என்று தெரியாத நிலையில் வாழ்ந்து வருகின்ற நாம், நம்முடைய மரணத்தருவாயிலும், மறுமையிலும் நம்மை காக்கும் இந்த தர்மத்தை, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியவாறு வழங்க வேண்டும்.

நம்பிக்கைக் கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள். (ஏக இறைவனை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள். (அல் குர்ஆன்: 2:254) 

source:tntjdubai


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...