Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 16, 2013

சிரியா புரட்சியாளர்களின் பிடியில் முக்கிய நகரங்கள்!

சிரிய வடக்குப்பகுதியில் உள்ள அல்சத்ததா என்ற எண்ணெய் வயல் நகரத்தில் இடம்பெற்ற போரில் 100இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் இறுதியில் அந்த எண்ணெய் நகரத்தை புரட்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இதில் 30 புரட்சிப் படையினரும், 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இறந்து விட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளனர். சிரியாவில் உள்நாட்டு சண்டை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிரிய அரச படை ஒவ்வொரு முக்கியப் பகுதிகளையும் போராளிகள் வசம் இழந்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக நடந்து வரும் சண்டைக்கு அங்கு 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 சிரிய கிளர்ச்சிப் படை சமீபத்தில் அந்நாட்டின் வடக்கேயுள்ள இராணுவ விமானத் தளத்தைக் கைப்பற்றியது மிக முக்கிய போர் வெற்றி என கூறப்படுகிறது. இதன் தொடர்பாக பிரிட்டனைப் பின்னணியாகக் கொண்டு சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ராமி அப்துல்-ரஹ்மான் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில்:சிரிய கிளர்ச்சிப் படை அதன் போராட்டத்தின் உச்சக் கட்டமாக சமீபத்தில் மிகச் சிறந்த ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. அதாவது சிரியாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள அலெப்போ நகரில் அமைந்திருக்கும் அல்-ஜர்ராஹ் இராணுவ விமானத் தளத்தை இராணுவத்துடன் கடுமையாகப் போராடி கிளர்ச்சிப் படை கைப்பற்றியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

 சமீப காலமாக சிரிய எல்லைகளில் உள்ள முக்கிய நகரங்களை புரட்சிப் படை கைப்பற்றி வந்துள்ளது. மேலும் இவற்றை மீட்பதற்காக இராணுவத்துக்கும் கிளர்ச்சிப் படைக்குமிடையே கடும் போர் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கிளர்ச்சிப் படை ரக்னா மாகாணத்தில் உள்ள யூப்ரடீஸ் ஆற்றின் மீது கட்டப் பட்டிருக்கும் சிரியாவின் மிகப் பெரிய அணையையும் கைப்பற்றியுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் மூலம் ஒரு நாளைக்கு 880 மெகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இம்மின் உற்பத்தி நிலையம் மூலமே சிரியாவின் பெரும்பாலான மின் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அணை மீது இராணுவம் குண்டு மழை பொழிந்தால்
அணை உடைந்து அருகிலுள்ள கிராமங்களும் நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது. இதேவேளை சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளும் தாக்குதல்களும் அண்டை நாடுகளான துருக்கி, லெபனான் ஆகியவற்றுக்கும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...