Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 16, 2011

முல்லைப் பெரியாறு உரிமையை எச்சூழலிலும் விட்டுத்தரமாட்டோம்’-தமிழகம்

   முல்லைப் பெரியாறு அணைப் விவகாரத்தில் தமிழகம் தனக்குள்ள உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காது என்று சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. முதலில், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் கருப்பசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு 15 நிமிடங்களுக்கு பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இதன்பின்பு, பேரவை கூடியதும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார்.

தீர்மானத்தின் விவரம்:

தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளின் வாதங்களையும், வல்லுநர்களின் அறிக்கைகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்பதால், அதன் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும், எஞ்சிய பலப்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட பின் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி
27-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த உத்தரவை நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில், “கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் 2006″ என்ற சட்டத்தை இயற்றி அந்தச் சட்டத்துக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று உண்மைக்கு மாறான பிரசாரம் மூலம் கேரள மக்களிடையே அந்த மாநில அரசு பீதியை கிளப்பி விடுகிறது.

புதிய அணை கட்டப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை கேரள அரசு வலியுறுத்தும் அதே நேரத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என கடந்த 9-ம் தேதி கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்றாலும், அரசமைப்புச் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட கேரள சட்டப் பேரவையை கண்டிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. எனவே, அந்தத் தீர்மானத்தின் மீது
தமிழக மக்களின் வருத்தத்தை தெரிவிக்கிறோம்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, கேரள அரசு உண்மைக்கு மாறான பிரசாரத்தை மேற்கொண்டு இருப்பதை ஒட்டி, தமிழகத்திலும், கேரளத்திலும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பொருட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை, அந்தப் பகுதிக்கு உடனடியாக மத்திய அரசு அனுப்ப வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக 2006-ம் ஆண்டு கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும்.

அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த, எஞ்சியுள்ள நீண்டகால அணைப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள, கேரள அரசு தமிழகத்துக்கு தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

எந்தச் சூழ்நிலையிலும் தமிழகம் தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் மீது பேரவையில் உள்ள கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பேசினர். பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக), மு.க.ஸ்டாலின் (திமுக), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜெ.குரு (பாமக), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்குநாடு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் பேசினர்.

அவர்களின் கருத்துகளைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். பின்னர், இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...