Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 21, 2010

கடலுக்குள் ஒரு விபரீதம்:மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் கசிவு

அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட கடல் பகுதி தான், அழகான மெக்சிகோ வளைகுடா. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், அதில் இருந்து பொங்கும் நுரைகள், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு நிரம்பிய, மீன்வளம் நிறைந்த பகுதி இது. இயற்கை அழகு மட்டுமல்ல, இயற்கை வளங்களும் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. இந்த கடல் பகுதியில், மிசிசிபி ஆற்றுப் படுகையின் அருகில் இயற்கை எரிவாயு நிறைந்து இருக்கிறது. இதில் இருந்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக, இந்த கடல் பகுதியை சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் குறி வைத்துள்ளன.



பிரிட்டிஷ் பெட்ரோலியம்இங்கு, பிரிட்டனை சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனமும், கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்துக்காக, டிரான்சொசஸன் என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. எண்ணெயை தோண்டி எடுப்பதற்காக, 8,000 அடி ஆழம் கொண்ட கடல் பகுதியில் இயந்திர மேடை அமைக்கப்பட்டு, பணிகள் நடந்தன. நவீன இயந்திரங்கள் மூலமாக, கடலுக்கு அடியில் துளையிட்டு, அவற்றில் குழாய்களை செலுத்தி, கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இயந்திரம் மூலம், கடலின் அடி மட்டத்தில் இருந்து பூமிக்குள் 30 ஆயிரம் அடி வரை துளையிட்டு, கச்சா எண்ணெய் எடுக்க முடியும்.



நடந்தது விபரீதம்கடந்த ஏப்ரல் 20ம் தேதி, மெக்சிகோ வளைகுடா பகுதியில், கச்சா எண்ணெய் எடுக்கும் பணி வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. அப்போது தான், யாரும் எதிர்பார்க்காத அந்த விபரீதம் நடந்தது. எண்ணெய் கிணற்றில் இருந்து கச்சா எண்ணெயை வெளியில் எடுக்க பயன்படுத்தப்படும் மிகப் பெரிய இரும்பு குழாய் திடீரென பெரிய சத்தத்துடன் வெடித்தது. குழாயின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டது. கடலுக்குள் 5,000 அடி ஆழத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பு மூலமாக பெருமளவு கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்துக் கொண்டு, வேகமாக வெளியேறி கடலில் கலந்தது.



எண்ணெய் கசிவு காரணமாக, கடலின் மேல் பரப்பில் சில இடங்கள் தீப்பற்றி எரிந்தன.11 பேர் பலிஇதன் காரணமாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த இயந்திர மேடையும், வெடித்துச் சிதறி கடலுக்குள் மூழ்கியது. எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். என்ன நடந்தது என, யூகிப்பதற்கு முன்பே, கச்சா எண்ணெய் பெருமளவில் வெளியேறியது. முன் எச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் படகுகள் மூலம் சிலர் உயிர் தப்பினர். மற்றவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்கப்பட்டனர். ஆனால், பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் எண்ணிக்கையை சரி பார்த்தபோது, 11 பேரை காணவில்லை என, தெரியவந்தது.



மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டைக்கு பின், 11 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அலட்சியம்இத்தனை பெரிய விபரீதம் நடந்தும், பிரிட்டிஷ் பெட்ரோலியம் இதுகுறித்து மூச்சு விடவில்லை. இதன்பின், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை, மெக்சிகோ வளைகுடாவில் நடக்கும் பேரவலத்தை கடுமையாக விமர்சித்தனர். விஷயத்தின் விபரீதத்தை உணர்ந்து பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், அமெரிக்காவை உதவிக்கு அழைத்தது. தனது கடற்கரை பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்த அமெரிக்காவும் ஆடிப் போனது.



இருந்தாலும், பிரிட்டன் நட்பு நாடு என்பதால், அமெரிக்கா இந்த விஷயத்தில் சற்று அடக்கி வாசித்தது.தடுப்பு முயற்சிபிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் இன்ஜினியர்கள், எண்ணெய் கசிவை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். குழாயில் வெடிப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்வதற்காக, ரிமோட் மூலம் இயக்கப்படும் சிறிய அளவிலான நீர்மூழ்கி வாகனங்களில் கடலுக்கு அடியில் சென்றனர். கடந்த மே 2ம் தேதி மட்டும், ஆறு முறை கடலுக்குள் சென்று, எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. குழாயில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து எண்ணெய் கசிந்ததால், அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம், மூன்று இடங்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டது.



தற்காலிக முயற்சியாக, குழாயில் வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் பெரிய தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. எண்ணெய் கசிவின் வேகத்துக்கு, அந்த தடுப்பு ஈடுகொடுக்கவில்லை. இதன்பின், வெடிப்பு ஏற்பட்ட குழாய்க்குள், வேறு ஒரு சிறிய குழாயை செலுத்தி, எண்ணெய் கசிவை தடுக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது.எவ்வளவு எண்ணெய் வெளியேறுகிறதுகடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கச்சா எண்ணெய் வெளியேறிக் கொண்டு தான் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் இதுவரை வெற்றி பெறவில்லை. வெளியேறும் எண்ணெய் அளவு குறித்து, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் முதலில் உண்மையான தகவல்களை கூறவில்லை.



"நாள் ஒன்றுக்கு 5,000 பேரல் எண்ணெய் தான் வெளியேறி, கடலில் கலக்கிறது' என, அந்நிறுவனம் தெரிவித்தது. சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் இதை கடுமையாக மறுத்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் நிபுணரும், எண்ணெய் துரப்பன துறை ஆலோசகருமான ஜான் ஆமோஸ் கூறுகையில்,"எனது மதிப்பீட்டின்படி, மெக்சிகோ வளைகுடாவில் தினமும் 20 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் கலக்கிறது' என்றார். கடலியல் ஆராய்ச்சி துறை நிபுணர் இயன் மெக்டொனால்டு கூறுகையில்,"நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேரல் எண்ணெய் கடலில் கலக்கிறது' என்றார். ஆனால், தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பேரல் கச்சா எண்ணெய் கடலில் கலப்பதாக தெரியவந்துள்ளது.



இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம்,"வெடிப்பில் இருந்து எவ்வளவு கச்சா எண்ணெய் வெளியேறுகிறது என்பதை அளவிடுவது மிகவும் கடினம். வெளியேறும் எண்ணெய் அளவை கணக்கிடுவதற்காக, கடலுக்கு அடியில் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை'என்றது. வெளியேறும் எண்ணெய் அளவை கணக்கிடுவதற்கு, நடுநிலையான விஞ்ஞானிகளையும் அந்த பகுதிக்கு செல்வதற்கு பிரிட்டிஷ் நிறுவனம் அனுமதி மறுத்து விட்டது. "இதனால், எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்தும் பணிக்கு இடையூறு ஏற்படும்' என, காரணம் கூறி வருகிறது.



இதற்கிடையே, கடலில் ஏற்கனவே கலந்து விட்ட கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் பணியில் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இருந்தாலும், வெளியேறிய எண்ணெயில், இதுவரை 40 சதவீதம் தான் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், இன்னும் 60 சதவீத எண்ணெய் கடலின் மேல் பரப்பில் தேங்கியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன பாதிப்பு ஏற்படும்?மெக்சிகோ வளைகுடாவில், இதுவரை 2,500லிருந்து, 9,100 ச.கி.மீ., வரை கச்சா எண்ணெய் திட்டு பரவியுள்ளது தெரியவந்துள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, கடல் பகுதி கறுப்பாக காட்சி அளிக்கிறது. கடலின் மேல் பரப்பு முழுவதும் களிமண் குழம்பு போல் மாறிப் போய் விட்டது.



கடல் நீருக்கான அறிகுறியே அங்கு தென்படவில்லை. தற்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகில் தான், டெல்டா தேசிய வனவிலங்கு சரணாலயம், பிரெட்டன் தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. வெகு விரைவில் இந்த பகுதிக்கும் கச்சா எண்ணெய் திட்டு பரவி விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி பரவி விட்டால், இங்குள்ள விலங்குகள் அனைத்தும் பலியாகி விடும் விபரீதமும் ஏற்படும். செத்து மடியும் கடல்வாழ் உயிரினங்கள்அமெரிக்காவின் லூசியானா மாகாண கடற்பகுதி முழுவதும் எண்ணெய் பிரதேசமாக மாறி விட்டது. மெக்சிகோவின் மெரிடா, டாம்பிகோ, மடாமொராஸ், அமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கும் வேகமாக எண்ணெய் பரவி வருகிறது.



இதன் காரணமாக, இந்த கடல் பகுதியில் வசிக்கும் மீன்கள், கடல் ஆமைகள், திமிங்கிலங்கள், கடல் பறவைகள் ஆகியவை தினமும் ஆயிரக்கணக்கில் செத்து, கரை ஒதுங்கிக் கொண்டே இருக்கின்றன. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புஇந்த பகுதியில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இரண்டு மாதங்களாக அவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை. ஒருவேளை எண்ணெய் கசிவு நிறுத்தப்பட்டாலும், ஏற்கனவே கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயை முழுமையாக நீக்குவது என்பது, நீண்ட கால முயற்சியாகவே இருக்கும். இதனால், "மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்வது என்பது, தற்போது நடக்க கூடிய விஷயம் அல்ல'என, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய், விரைவில் அகற்றப்படாவிட்டால், சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்படும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தீர்வு என்ன?சுற்றுச் சூழலை பெரிய அளவில் பாதிக்கும் இந்த எண்ணெய் கசிவு விவகாரம், சர்வதேச நாடுகளுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் பிரிட்டனும், அமெரிக்காவும் அமைதி காப்பது, மற்ற நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் கசிவை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்கு பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் என்ன திட்டம் வைத்துள்ளது, மெக்சிகோ வளைகுடாவில் உள்ள எண்ணெய் கிணற்றுக்குள் இன்னும் எவ்வளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது, ஏற்கனவே கடலில் கலந்து விட்ட கச்சா எண்ணெயை முழுமையாக அகற்றி விட முடியுமா என்ற கேள்விகளுக்கு, வெளிப்படையான பதில் எதுவும் தெரிவிக்க பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் மறுத்து வருகிறது. "இந்த ஆழ் கடல் துயரம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. அதுவரை கடல் வாழ் உயிரினங்கள் செத்து மடிவதையும், சுற்றுச் சூழல் மாசுபடுவதையும் தடுத்து நிறுத்த முடியாது.



சர்வதேச நாடுகள், இந்த விஷயத்தில் தீவிரமாக களமிறங்கினால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்' என்பது, சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கருத்து. சர்வதேச சமுதாயம் விழித்துக் கொள்ளுமா? மிகப் பெரிய எண்ணெய் கசிவு:அமெரிக்க கடல் பகுதியில் இதுவரை நடந்த எண்ணெய் கசிவுகளில், தற்போது மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தான், மிகப் பெரிய அளவிலானது என, கூறப்படுகிறது. கடந்த 1989ல் அலஸ்காவில் ஏற்பட்ட எக்சோன் வால்டாஸ் எண்ணெய் கசிவு விபரீதத்தின் பாதிப்பை விட, தற்போது மெக்சிகோவில் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் அதிகம் என, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக, சர்வதேச அளவில் 1991ல், வளைகுடா போரின்போது ஈராக், பெர்சியன் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தான், மிகப் பெரிய அளவிலானது. எண்ணெய் கசிவை தடுக்கஇந்திய விஞ்ஞானி யோசனை:



மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான புதிய யோசனையை, சேஷாத்ரி ராம்குமார் என்ற இந்திய விஞ்ஞானி கூறியுள்ளார். இவர், டெக்சாசில் உள்ள சுற்றுச் சூழல் மற்றும் மனித நல கல்வி மையத்தில் பேராசிரியாக பணியாற்றுகிறார். இவர் கூறியதாவது:எண்ணெய் கசிவை தடுப்பதற்கு தற்போது "சின்தடிக் பூம்'எனப்படும் முறை தான் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் குறைந்த அளவு எண்ணெயை மட்டுமே உறிஞ்ச முடியும். மேலும், சுற்றுச் சூழலுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். எண்ணெய் கசிவை தடுப்பதற்காகவே, "பைபர்டெக்ட்' என, அழைக்கப்படும் பருத்தி கார்பன் உறிஞ்சியை கண்டுபிடித்துள்ளேன்.



கார்பன் கலந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த பருத்தி கார்பன் உறிஞ்சி, மூன்று அடுக்குகளை கொண்டதாக இருக்கும். மேல் மற்றும் கீழ் அடுக்குகள் பருத்தியை உள்ளடக்கி இருக்கும். இவை கடலில் உள்ள எண்ணெயை உறிஞ்சும் தன்மை கொண்டவை. நடுவில் உள்ள அடுக்கில் இருக்கும் கார்பன் எண்ணெயில் உள்ள தீமை விளைவிக்க கூடிய ரசாயன பொருட்களை உள்ளிழுக்கும் திறன் உடையது. இந்த பருத்தி கார்பன் உறிஞ்சி, அதன் எடையைப் போல், 40 மடங்கு எண்ணெய் கசிவை உறிஞ்சும் திறன் உடையது. இதனால், சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு சேஷாத்ரி ராம்குமார் கூறினார். இரட்டை கோபுர தாக்குதலை விடமிக மோசமான பாதிப்பு இது:



மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டபின், இதுவரை நான்கு முறை அந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியுள்ளார், அமெரிக்க அதிபர் ஒபாமா. இதுகுறித்து அவர் கூறியதாவது: அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பை விட, இது மிகவும் மோசமானது. அப்போது சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை போல், தற்போதும் ஏற்பட்டுள்ளது. இந்த விபரீதத்தின் மூலம், அமெரிக்காவின் சுற்றுச் சூழல் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.



குறிப்பாக, கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடர்பான கொள்கையில் மாற்றம் தேவை. இந்த சம்பவம் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், மிகப் பெரிய சவாலாகவும் அமைந்து விட்டது. இதற்கு காரணமான நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடும் பெற்றுத் தரப்படும்.இவ்வாறு ஒபாமா கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...