Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 26, 2015

சிறுபான்மையின மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கலெக்டர் அறிக்கை!

கடலூர்:சிறுபான்மையின மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.கடலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச்சேர்ந்த சிறுபான்மையின மாணவ–மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ–மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், அந்த மாணவ–மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில்(1–ம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது.

1 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தலுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து
அதனை பூர்த்திசெய்து,தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் அடுத்த மாதம் 15–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்விநிலையங்கள் மாணவ–மாணவியரிடம் இருந்து பெற்ற விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கானகேட்பு பட்டியலில் பதிந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் அடுத்த மாதம் 25–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, இணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைக்க(அப்லோடு) வேண்டும். விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம்(டவுன்லோடு) செய்து கல்வி நிலையத்தில் அடுத்த மாதம் 31–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்விநிலையங்கள் மாணவ–மாணவியரிடம் இருந்து பெற்ற விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கானகேட்பு பட்டியலில் பதிந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் அடுத்த மாதம் 31–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...