Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 27, 2014

கடலூரில், கலெக்டர் கிர்லோஷ்குமார் தேசிய கொடியேற்றினார்!

கடலூரில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் கிர்லோஷ்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து, 230 பேருக்கு ரூ.62 லட்சத்து 89 ஆயிரத்து 892 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தியாவின் 65–வது குடியரசு தினவிழா நேற்று நாடெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூரில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விழாவையொட்டி அண்ணா விளையாட்டு மைதானம் தேசிய கொடிகளாலும், வண்ண காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் விழா மேடைக்கு வந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். ஆயுதப்படை போலீசாரும், தீயணைப்பு படையினரும், ஊர்க்காவல்படையினரும், தேசிய மாணவர் படையினரும், நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களும், சாரண– சாரணியர்களும் மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். முன்னதாக கலெக்டர் கிர்லோஷ்குமார் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகாவும் உடன் வந்தார். இதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 21 போலீசாருக்கு
முதல்–அமைச்சரின் காவலர் பதக்கங்களையும், 4 போலீசாருக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகள் 52 பேரை சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 230 பயனாளிகளுக்கு 62 லட்சத்து 89 ஆயிரத்து 892 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 11 பேருக்கு இலவச தையல் இயந்திரம், 4 பேருக்கு சலவை பெட்டி ஆகியவை வழங்கப்பட்டன. வருவாய்த்துறை, காவல் துறை, மருத்துவத்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 51 பேருக்கு கேடயம் வழங்கி கலெக்டர் கிர்லோஷ்குமார் பாராட்டினார். அப்போது லேசான சாரல் மழை பெய்தது. இருப்பினும் தொடர்ந்து மாணவ– மாணவிகளின் கண் கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் புனித மேரி பள்ளி மாணவிகள், புனித சேவியர் பள்ளி மாணவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. மேட்டுப்பாளையம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்கள் தேச தலைவர்கள் வேடம் அணிந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கலைநிகழ்ச்சிகளை கலெக்டர் கிர்லோஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராதிகா மற்றும் முக்கிய பிரமுகர்களும், மைதானத்தில் திரளாக திரண்டு இருந்த பொதுமக்களும் பார்த்து ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளை நடத்திய கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, புனித மேரி மெட்ரிக்குலேசன் பள்ளி, மேட்டுப்பாளையம் ரத்தினா மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு குழந்தைகள் காப்பகம், புனித சேவியர் பள்ளி மாணவ–மாணவிகளை கலெக்டர் கிர்லோஷ்குமார் பாராட்டியதுடன், முதல் 3 இடங்களை பிடித்த மாணவ– மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரன், ஆர்.டி.ஓ. ஷர்மிளா, கடலூர் நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன், மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் ஜவகர்லால், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார். விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலமாக சோதிக்கப்பட்ட பின்னரே விழா அரங்குக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

-Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...