Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 17, 2014

இலங்கையில் முஸ்லிம்கள் மீது சிங்களர் வெறியாட்டம்! 3 முஸ்லிம்கள் கொலை!! -உலக நாடுகள் கண்டனம்

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது சிங்களர்கள் நடத்தி வரும் கொலை வெறித்தாக்குதலில் 3 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வருவதால் நாட்டின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

இலங்கை அரசில் தமிழர்கள் பங்கேற்பதை பெரும்பான்மையான சிங்களர்கள் வெறுத்தனர். இதனால் தமிழருக்கு எதிரான இனவிரோத போக்கை சிங்களர்கள் கட்டவிழ்த்தனர். இதைத்தொடர்ந்து தனி ஈழம் கேட்டு விடுதலை புலிகள், ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆயுத போராட்டம் கடந்த சில வருடங்களாக முடிவிற்கு வந்துள்ள நிலையில், சிங்களர்கள் கவனம் தற்போது இஸ்லாமியர்கள் மீது திரும்பியுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 10 விழுக்காடாக உள்ள முஸ்லிம்கள், இலங்கை அரசியலில் அதிகம் பங்கெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பவுத்த பிட்சுக்கள் பகிரங்கமாக பேசிவருகிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் பகுதிகளில் நேற்று மாலை பவுத்த பிட்சுக்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டுள்ளனர்.தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அளுத்கம மற்றும் பெருவலா ஆகிய கடலோர நகரங்களில் இருதரப்புக்கும் நடுவே நேற்றிவு முதல் இன்று பகல் வரை மோதல் நடைபெற்று வருகிறது.

இதில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முஸ்லிம்களின் கடைகள், வணிக நிறுவனங்கள், பவுத்த கடும்போக்குவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டன. சில பகுதிகளில் மசூதிகள் தாக்கப்பட்டதுடன், தொழுகை நடத்தியவர்களும் ரத்தம் வரும்வரை அடிக்கப்பட்டுள்ளனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த முஸ்லிம்களை கூட பவுத்த கடும்போக்குவாதிகள் விட்டுவைக்கவில்லை. பஸ்களை நிறுத்தி அவர்களை கீழே இழுத்து அடித்துள்ளனர். போலீசார் தலையிட்டு வன்முறையாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆயினும், நிலைமை கைமீறி போனதால் அலுத்கமா, பெருவலா பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது., சட்டத்துறை அமைச்சர் ஹக்கீம் , "பவுத்தர்கள் தாக்குதல் நடத்தியதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்த அரசில் அங்கம் வகிக்க நான் அவமானப்படுகிறேன்" என்று தெரிவித்ததாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஐநா மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை அதிர்ச்சி!

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது சிங்களர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
ஆணையர் நவிபிள்ளை அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கமவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் குறித்து நவிபிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த வன்முறையை தடுப்பதற்கு இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையை தூண்டும் வெறுப்பை உருவாக்கும் பேச்சை தடுக்க வேண்டும். அனைத்து சிறுபான்மையினரையும் இலங்கை அரசு பாதுகாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்

இலங்கைக்கு அமெரிக்கா அட்வைஸ்:

முஸ்லிம்களை குறி வைத்து சிங்களர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து அகதிகளாகினர். முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் எரிக்கப்பட்டு, சூறையாடப்பட்டன. இந்த தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்தி கலவரத்தை கட்டுப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்:

இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டே சிங்களர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். அளுத்கம, பேருவளையில் முஸ்லிம் வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மூவர் படுகொலை செய்யப்பட்டனர்.பெரும்பான்மை இனத்தவர்களின் தீவிரப் போக்குடைய இரு இயக்கங்கள் கூட்டம் நடத்திவிட்டு வீதி வழியாக ஊர்வலம் போன சமயம் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் முன்னரே திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தோன்றுகின்றது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் இருந்த போதிலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாயினும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் அவர்களால் தடுக்க முடியவில்லை. இது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் விழிப்பில்லாத நிலையில் இருந்துள்ளனர் என்பதையே காட்டுகின்றது.

கடந்த காலத்திலும் முழு நாட்டுக்கும் தீங்கை ஏற்படுத்தக் கூடிய இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. தவறிழைத்தவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் இத்தகைய சம்பவங்கள் மீள நடைபெறாமல் இருக்கின்றமையை உறுதிப்படுத்துவதற்காக வேறு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசைக் கோருகின்றது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...