Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 08, 2014

கடலூர் மாவட்டத்தின் 14–வது கலெக்டராக சுரேஷ்குமார் பதவி ஏற்பு !

கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக சுரேஷ்குமார் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் ‘பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளை தெரிவிக்கலாம்‘ என கூறினார்.

கடலூர் மாவட்டமானது ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடந்த 30–9–1993 அன்று தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம் என்ற பெயரில் உதயமானது. தற்போது பதவி ஏற்றுள்ள சுரேஷ்குமார் கடலூர் மாவட்டத்தின் 14–வது கலெக்டர் ஆவார். புதிய கலெக்டர் சுரேஷ்குமார் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். எம்.எஸ்.சி.(ஜியாலஜி), எம்.பி.ஏ. படித்துள்ள இவர் 2001–ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று பழனி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியராகவும், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் சென்னை கூட்டுறவு பதிவாளராக பதவி உயர்வு பெற்று செல்கிறார். இதை அடுத்து தமிழ்நாடு நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமையின் நிர்வாக இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார் கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து புதிய கலெக்டர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக
சுரேஷ்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே கலெக்டராக பணியாற்றிய கிர்லோஷ்குமார் புதிய கலெக்டர் சுரேஷ்குமாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்து விட்டு விடைபெற்று சென்றார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரன், ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் மகேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ஷர்மிளா, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயஅருள்பதி மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள், அரசு பணியாளர்கள், ஊழியர்கள் புதிய கலெக்டர் சுரேஷ்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் சுரேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த திட்டங்கள் அனைத்தும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் உரிய முறையில் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளும் எந்தவித சிறு தடங்கலும் இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களும், அதிகாரிகளும் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை தெரிவிக்கலாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் எனது கவனத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் அதனை தீர்த்து வைக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன்.‘. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...