Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 24, 2014

வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைவு!

கடுமையான வெயிலின் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரியாகும். இந்த ஏரியை நம்பி மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழை காலங்களில் வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான செந்துறை, ஆண்டிடம், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக நீர் வரத்து இருக்கும். ஏரிக்கு முக்கியமாக கல்லணை, கீழணை வழியாக நீர்வரத்து உள்ளது. ஏரியில் மேல்கரையில் 8 மதகுகளும், கீழ்கரையில் 26 மதகுகள் என மொத்தம் 34 மதகுகள் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இதை கடல் மட்டத்தில் இருந்து கணக்கிடுகிறார்கள். பொதுவாக ஏரி முழுகொள்ளளவு நீர்பிடிப்பு இருக்கும் காலங்களில் மேல்கரையையொட்டி உள்ள 6 கிராமங்கள் பாதிப்பு அடையும் சூழ்நிலை உருவாகும். மேலும், ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீருக்காக தினமும் 75 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீராணம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் 47 அடி தண்ணீரை ஏற்றி கண்காணித்து வந்தனர்.

மேலும், ஏரியை நம்பியுள்ள விவசாய நிலங்களில் நெல் அறுவடை என்பதால் பாசனத்திற்கு தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு, தினமும் சென்னைக்கு மட்டும் குடிநீர் அனுப்பும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத காரணத்தாலும், சென்னைக்கு தினமும் குடிநீர் அனுப்புவதாலும், கடுமையான வெயில் இருப்பதாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 44.65 அடியாகும். சென்னைக்கு நேற்று வினாடிக்கு 79 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

இதே நிலை நீடித்தால் 40 நாட்களில் ஏரி வறண்டு விடும்
சூழ்நிலை உருவாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ஏரியில் இருந்து தினமும் சென்னைக்கு மட்டும் குடிநீர் அனுப்புவதை அதிகாரிகள் குறிக்கோளாக கொண்டுள்ளனர். தற்போது, விவசாயத்திற்கு தண்ணீர் தேவை இல்லை. இருப்பினும் அடுத்த பட்டத்திற்கு தண்ணீர் தேவைப்படும். அதனை அதிகாரிகள் கணக்கிடாமல் சென்னைக்கு மட்டும் அதிகளவில் தண்ணீர் அனுப்பி வருகின்றனர். கோடை காலத்தில் ஏரியில் தண்ணீர் குறைந்தவுடன் தமிழக அரசு ஒதுக்கி உள்ள ரூ.40 கோடியை கொண்டு விரைவில் தூர்வார வேண்டும் என்றார்.
-Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...