Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 20, 2010

குஜராத் இனப் படுகொலை: பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டில் மோசடி

வதோதரா:2002 குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடுகள் சரியாக அடைவதில்லை என பலமுறை மனித உரிமை ஆணையங்களுக்கும்,சிறுபான்மையின கமிஷன்களுக்கும் புகார்கள் வந்துள்ளன.தற்போது முதல் முறையாக நஷ்டஈட்டை கொள்ளையடித்ததாக 14 அரசு மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.புபேன்சிங் பாபோர் என்பவரால் பகோர் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கில், சுமார் ரூ.38.25 லட்சம் அரசு கஜானாகளிளிருந்து சுருட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 பேரில்,12 பேர் தற்போதைய அரசு அதிகாரிகள் ஆவர். மனுதாரரின் கூற்றுப்படி 2002-2009 திலிருந்து பதிவியில் இருந்த அரசு அதிகாரிகளால் இந்நஷ்டஈடுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் பணம் பெறாத நிலையில், அவர்கள் பணம் பெற்றதாக போலி ஆவணங்களை தயாரித்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடித்தவர்களில் கிளர்க்கிலிருந்து தாலுகா மூத்த அதிகாரிகள் வரை அனைவருக்கும் பங்குண்டு என்பதாக கூறியுள்ளார்.ஒருவருக்கொருவர் ஒத்துழைத்த பிறகு இவர்கள் அரசு சார்பாக போலி சுற்று அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.இவர்கள் மீது ஏமாற்றுதல், மோசடி, கிரிமினல் நடவடிக்கைகள் என பல பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்."நாங்கள் இது குறித்து விசாரித்து வருகின்றோம், அனைத்து போலி ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளோம், விரைவில் சில கைதுகள் நடக்கும்" என்பதாக போலீஸ் துணை இன்பெக்டர் சவ்ஹான் தெரிவித்தார்

ஜூலை 19, 2010

நியூயார்க் நகர பள்ளிகளில் பெருநாள் விடுமுறையை சேர்க்க முஸ்லிம்கள் முயற்சி

நியூயார்க் நகர முஸ்லிம் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நகர அமைப்புகள் தங்களின் மார்க்கம் சார்ந்த விடுமுறைகளை நியூயார்க் நகர பள்ளிகளின் பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.இது தொடர்பாக சட்ட இயக்குநர்களிடம் தங்களின் திட்டத்தை சேர்க்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.பள்ளி விடுமுறை நாட்கள் பட்டியலில் ஈத்அல் ஃபித்ர் மற்றும் ஈத்அல் அல்ஹாவை சேர்ப்பதால் 9/11 தாக்குதலுக்கு பிறகு நிலவும் முஸ்லிம் விரோத அபிப்பிராயத்தையும், அவநம்பிக்கையையும் குறைக்க உதவும் என்று கூறுகின்றனர்.நியூயார்க் நகர பள்ளிகளில் 100,000 அல்லது 12 சதவீததிற்கும் மேலான முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்வாதாக அவர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து நூற்றுக்கணக்கானோர் நியூயார்க் சிட்டி ஹாலிற்கு வெளியில் திரண்டு மேயர் ப்லூம் பெர்க்கிற்கு இந்த விஷயத்தை வற்புறுத்தினர்.இந்த விடுமுறைகள் வார இறுதியிலோ அல்லது மற்ற விடுமுறை நாட்களில் வருவதால் கூடுதலாக 5 நாட்கள் மட்டுமே விடுமுறை விட வேண்டி இருக்கும் என்று கூறுகின்றனர்.ஆனால் மேயர் ப்லூம்பெர்க் மாணவர்களுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்ககூடாது என்று இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

'இடஒதுக்கீடு என்பது முஸ்லிம்களின் ஜனநாயக உரிமை' - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

டெல்லி:'முஸ்லிம்களை கவுரவப்படுத்தும் வகையில் சிறப்பாக அவர்களுக்கு எதுவும் செய்துவிடவில்லை மாறாக சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதும், முஸ்லிம்களின் இடஒதுக்கீடும் அவர்களின் ஜனநாயக உரிமை' என்பதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.மத்திய அரசு அளித்த அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;'முஸ்லிம் சமுதாயம் ஒரு மோசமான இருலுலகில் வாழ்வதை சச்சார் கமிட்டி தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இடஒதுக்கீடு போன்ற நடைவடிக்கைகளின் மூலம்தான் முஸ்லிம் சமுதாயம் முன்னேற்றம் அடையும்.இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில்,அச்சமுதாயம் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இந்தியாவின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் முன்னேற்றம் அவசியம் என்று கூறியுள்ள மத்திய அரசு,இதன்படி இடஒதுக்கீடு மத்தியில் ஆளும் அரசின் கடமை என்பதாக குறிப்பிட்டுள்ளது.முஸ்லிம் சமுதாயம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இது முஸ்லிம்களின் உரிமையே தவிர அவர்களை அரசு கவுரவிக்கவில்லை என்பததாகவும் கூறியுள்ளது.இடஒதுக்கீடு தற்போது நிலவும் சூழலில் நிறைவேற்றப்படவில்லை என்றால், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்களின் நிலைமைகளுக்கும் இன்று நிலவும் இடைவெளியை என்றைக்கும் பூர்த்தி செய்ய இயலாது என்றும் கூறியுள்ளது.இடஒதுக்கீடு அல்லாமல் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சுமார் 90 நகரங்களில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிக்கூட இல்லாத நகரங்களில் Multi-Sectoral development Program என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் 14 பக்கங்களைக் கொண்ட அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ்ஸின் 83 அமைப்புகளில் ஒன்றான ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு புறம்பானது என்றும் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் இச்சிறப்பு அளிக்கப்படுவது அரசியல் சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தது.இதனைத் தொடர்ந்துதான் மத்திய அரசு இப்பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஜூலை 18, 2010

அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் ஆழ்ந்த தூக்கம் "அவுட்'

கம்ப்யூட்டர் மற்றும் ஜபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என, அமெரிக்கா விஞ்ஞானிகள் கண்டுபடித்துள்ளனர்.கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பவர்கள் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், கம்ப்யூட்டர், லேப்-டாப் மற்றும் ஜபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு நாளடைவில் தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரியவந்தது.மனித மூளை காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து, இரவு ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.
இதை, "மெலட்டோனின்' என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒரு அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூறுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், "மெலட்டோனின்' ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ கூறுகையில், "மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் வடிவமைப்பை பெற்றறுள்ளது.இரவில் கம்ப்யூட்டரை தொடர்ந்து பார்ப்பதால், அதிலிருந்து வரும் நீல நிற வெளிச்சத்தைக் கொண்டு "மெலட்டோனின்' ஹார்மோன், தூக்கத்தை தவிர்த்து, விழிப்புடன் இருக்க மூளையைத் தூண்டும்.இதனால், நாளடைவில் தூக்கம் வருவதில் சிக்கல் எழும். இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களைப் படிப்பதும் நல்ல வழி,' என்றார்.-

வி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., தலைமை இன்ஜினியர் வரை கைது : லஞ்சம் தொடர்வதால் வேதனை

ஒவ்வொரு துறை ஊழியர்களின் சம்பளத்திற்காக அரசு பல கோடி ரூபாய் பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்நிலையில், வி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., மற்றும் தலைமை இன்ஜினியர் என பலரும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறப்பு சான்றிதழ் பெற லஞ்சம், மின் இணைப்பு பெற லஞ்சம், குடிநீர் இணைப்பு பெற லஞ்சம், பணத்தை மீட்டுத் தர லஞ்சம் என அனைத்து துறைகளும் தற்போது லஞ்சத்தில் திளைத்து வருகின்றன. சாதாரண வருமான சான்றிதழ் வாங்குவதற்காக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்றால், அவருக்கு கீழ் வேலை பார்ப்பவருக்கு கணிசமான தொகை கொடுத்தால் தான் சான்றிதழ் கிடைக்கும். இதே போன்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.மின்சார வாரியம், குடிநீர் வாரியம், மாநகராட்சி, வருவாய் துறை, போலீஸ் என அனைத்து துறைகளிலும் லஞ்சம் இல்லையேல் ஒரு காரியமும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதை நாம் அறிய முடிகிறது. ஆனால் அரசோ, ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் என்ற பெயரில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் பணத்தை வாரி வழங்கி வருகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வையும் வழங்கி வருகிறது. இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
மின்சார வாரியத்தில் மட்டும் ஊதிய உயர்வு காரணமாக, வாரியத்திற்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை கூடுதல் இழப்பு ஏற்படுகிறது.ஊதிய உயர்வுக்கு பின், மின்வாரியம் சார்பில் தலைமை பொறியாளருக்கு மாதம் சாராசரியாக 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இருந்தாலும் அவர், அந்த சம்பளம் போதாமல் ஊழியர் இடமாற்றம், மின் இணைப்பு உள்ளிட்டவற்றிற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டே வருகிறார் என்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. சமீபத்தில், சென்னையில் லஞ்சம் பெற்றதாக தலைமை இன்ஜினியர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது எடுத்துக்காட்டு. இவர்கள் தவிர வாரத்திற்கு இரண்டு வி.ஏ.ஓ.,க்கள், ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்படுகின்றனர்.
மற்ற துறைகளில் லஞ்சம் பெற்றால் தடுக்க வேண்டிய போலீஸ் துறையில் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் லஞ்சம் பெறப்படுகிறது. சமீபத்தில் டி.எஸ்.பி., ஒருவர் மற்றும் எஸ்.ஐ., - தலைமைக்காவலர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று இன்னும் பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள், குறிப்பிட்ட துறைகளுக்கு லஞ்சப் பணத்துடன் போனால் மட்டுமே காரியம் நடக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் அரசு சம்பளத்தை வாரி இறைத்த போதிலும், லஞ்சம் கரை புரள்வதும், மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் மட்டுமே, "குடும்பம் நடத்த முடியும் என்ற அவல நிலை' அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதும் மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜூலை 15, 2010

ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் 8 மாநிலங்களில் கடும் வறுமை: 42 கோடி பேர் தவிப்பு

ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறை இந்தியா குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கை வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளது. ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் தற்போது தெரிய வந்துள்ளது. அந்த தகவல்கள் இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக உள்ளது.

2020-ம் ஆண்டு அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்து விடும் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவில் 8 மாநிலங்களில் மிக கடுமையான வறுமை நிலவுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரபிரதே சம், மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் மக்கள் வறுமையில் சிக்கி தவிப்ப தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

8 மாநிலங்களிலும் 42 கோடி பேர் வறுமையில் தவிக்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 26 நாடுகளில் 41 கோடி பேர் வறுமையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடரும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த ஆண்டும் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மருத்துவம், பொறியியல், தொழில் படிப்புகளிலும் வேலைவாய்ப்பிலும் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 69 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், அருந்ததியினர், இஸ்லாமியர் என சதவீத வாரியாக பிரித்து தரப்படுகிறது.
இந்நிலையில், தொழில் கல்வியில் குறிப்பாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1994ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்கும். இடைக்கால உத்தரவில், சம்பந்தப்பட்ட ஆண்டில் மாநில அரசு அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீட்டை தொடரலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர்குமார் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு அரசியலமைப்பு சட்ட வழக்காக விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் பின்தங்கிய மக்கள் உள்ளனரா என்பதற்கான ஆவணங்களையும், ஆதாரங்களையும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் தமிழக அரசு கொடு¢க்க வேண்டும்.
அரசு தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து, எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என்று மண்டல் கமிஷன் வழக்கில் விலக்கு அளிக்கப்பட்டதை, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளலாம்.
அதன் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கலாம். அதுவரை, தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும். இந்த உத்தரவோடு இந்த வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

தினகரன்-14-7-2010

ஜூலை 14, 2010

நமதூரில் திருடர்கள் அட்டூழியம்....

நேற்று இரவு நமதூர் பிஸ்மி தெருவில் இரண்டு வீட்டில் பீரோவை உடைத்து திருடர்கள் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

ஜூலை 12, 2010

இந்திய முஸ்லீம்கள் தீவிரவாதிகள் அல்ல - அமெரிக்க அதிகாரி

வாஷிங்டன்:இந்தியாவில் உள்ள 160 மில்லியன் முஸ்லீம்களும் தீவிரவாதிகள் கிடையாது என்றும்,என் சமூகம் இப்படி அழைக்கப்படுவதை கண்டு நொந்துப்போயுள்ளதாக இந்திய அமெரிக்கரும்,ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஃபராஹ் பண்டித் கூறியுள்ளார்.இந்தியாவில் முஸ்லீம்களின் தீவிரவாதம் தலைதூகியுள்ளதா? என்ற கேள்விக்கு ஃபராஹ் ஆவேசமாக பதிலளிக்கையில், ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ! இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதிகள் கிடையாது என்றார்.முஸ்லீம்கள் எந்த விதமான தீவிரவாதத்திலும் ஈடுபடமாட்டார்கள் என்று கூறிய ஃபராஹ்,உண்மையைச் சொல்லபோனால் தங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள 'தீவிரவாதக் கறையை' முஸ்லீம்கள் துடைத்தெறிய போராடுகிறார்கள் என்றார்.'மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இதில் முஸ்லீம்களும் அடங்குவர் அவர்களும் அவாறான மத்திரையை களைய போராடுகிறார்கள்' என்றார். இந்நாடுகளில் மட்டும் சுமார் 30 மில்லியன் முஸ்லீம்கள் வாழ்ந்துவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.நடந்து கொண்டிருக்கும் போர்களைப் பற்றி கேள்வி கேட்டபோது, இப்போர்கள் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்ற ஒபாமாவின் கருத்தை ஃபராஹ் முன்மொழிந்தார்.

அப்சல் குரு-காங்கிரஸ் பற்றிப் பேசிய பி.ஜே.பி. தலைவர் கத்காரி ஒரு 'மனநோயாளி' - சமாஜ்வாதி

அலஹாபாத்:பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அப்சல் குருவின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் அப்சல் குரு காங்கிரஸ் கட்சியின் மருமகனாக திகழ்வதாகவும் பி.ஜே.பி. தலைவர் நிதின் கத்காரி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.இது குறித்து விமர்சித்துள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி.குமார் ராமன் சிங்க், இது போன்ற கருத்துக்கள் ஒரு மனநோயாளியிடமிருந்தே எதிர்பார்க்க முடியும் என்றார்.இக்கருத்துக்களை துரதிஷ்டம் என்று கூறிய குமார், ஒரு தேசிய கட்சியின் தலைவரிடமிருந்து இதுபோன்ற கருத்துக்கள் ஒரு போதும் வரக்கூடாதது என்றார். இது வெறுப்பு கொண்ட பி.ஜே.பி. அரசியல் கொள்கையை பிரதிப்பலிப்பதாக கூறியுள்ள அவர், இந்திய ஜனநாயக கொள்கைக்கும் பி.ஜே.பி.யின் கொள்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளதாக தெரிவித்தார்.அப்சல் குரு விவகாரத்தில், பி.ஜே.பி வேண்டுமென்றே சிறுபான்மையின மக்களை சீண்டிப் பார்க்கிறது என்று கூறியுள்ள குமார், இங்கு தான் சமாஜ்வாதி கட்சிக்கும் பி.ஜே.பி போன்ற கட்சிக்கும் மாற்றங்கள் இருப்பதாக தெரிவித்தார்.'காங்கிரஸை நாங்கள் எதிர்த்தாலும், இதுபோன்ற கேவலமான ஒழுக்கமற்ற தன்மையை ஒருபோதும் கையில் எடுத்தது கிடையாது' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் சிங்க், பி.ஜே.பி. தலைவருக்கு காலில் வர வேண்டிய 'புண்' வாயில் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.'அரசியல் அனுபவமில்லாத கட்காரிக்கு, எங்கு எப்பொழுது என்ன பேச வேண்டும் என்பதே தெரியாது என்றார். இது போன்ற மனிதர்கள் தேசிய கட்சியின் தலைவர்களாக ஆக்கப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது.' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏழு மாதங்களில் 90 அமெரிக்க வங்கிகள் திவால்

நியூயார்க்:அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 90 வங்கிகள் திவாலாகியுள்ளன.சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நீங்கி பொருளாதார நிலை மேம்பட்டுள்ள போதிலும் அமெரிக்காவில் வங்கிகள் திவாலாவது தொடர்கதையாகி வருகிறது.அமெரிக்காவில் வேலையின்மையும் இப்போது அதிகரித்து வருகிறது. வேலையில்லாதவர்களில் விகிதம் 9 சதவீததத்தைத் தாண்டியுள்ளது. வரும் நாள்களில் மேலும் பல வங்கிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் தெரிகிறது.2010-ம் ஆண்டில் சராசரியாக ஒரு மாதத்துக்கு 13 வங்கிகள் என்ற அடைப்படையில் மூடப்பட்டுள்ளன.முக்கிய வங்கிகளான ஹோம் நேஷனல் வங்கி, பே நேஷனல் வங்கி, யூஎஸ்ஏ வங்கி, ஐடியா பெடரல் சேவிங்ஸ் வங்கி ஆகியவை ஜூலை 9-ம் தேதி மூடப்பட்டன.வேலைவாய்ப்பு இன்மை விகிதம் அதிகரிப்பதே சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் திவால் ஆவதற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகளின் டெபாசிட்களுக்கு காப்பீடு வழக்கும் பெடரல் டெபாசிட் காப்பீட்டு நிறுவனத்தில் (எஃப்டிஐசி) சுமார் 8 ஆயிரம் வங்கிகள் காப்பீடு செய்துள்ளன. இப்போது வங்கிகள் திவால் ஆனதால் சுமார் 81 மில்லியன் டாலர் அந்த காப்பீட்டு நிறுவனத்துக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் மூடப்பட்டன. இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு அதைவிடக் கூடுதலாக வங்கிகள் மூடப்படும் அபாயம் உள்ளது.வங்கிகள் தொடர்ந்து மூடப்படுவதால், நாட்டின் வங்கி முறையே முழுத் தோல்வி அடைந்து விடும் வாய்ப்பு உள்ளது என்று எஃப்டிஐசி தலைவர் ஷீலா சி பேயர் தெரிவித்துள்ளார்.